வரலாற்று ரீதியாக நேருவின் காலம் முதல், மன்மோகன் சிங் காலம் வரை, வடகிழக்கு மாநிலங்கள் பெரும்பாலும் இந்திய தேசியத்தில் இருந்து ஓரங்கட்டப்பட்டிருந்தது. பாரதப் பிரதமராக பிரதமர் மோடி பதவியேற்றதில் இருந்து, இந்த எட்டு மாநிலங்கள் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வளர்ச்சி அடைந்துள்ளது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
இந்தியாவின் இயற்கை வளம் மிக்க மாநிலங்களில் குறிப்பிடத்தகுந்தவை ‘ஏழு சகோதரிகள்’ என முன்பு அழைக்கப்பட்டு வந்த அசாம், மேகாலயா, நாகாலாந்து, மணிப்பூர், அருணாச்சலப் பிரதேசம், மிசோரம், திரிபுரா ஆகிய மாநிலங்கள் ஆகும். இப்போது சிக்கிம் மாநிலமும் வடகிழக்கு மாநிலமாகச் சேர்க்கப்பட்டுள்ளது. வடகிழக்கிலிருந்து வடஇந்தியாவை அடைய சில்குரி என்னும் குறுகிய பாதை ஒன்று மட்டுமே உள்ளது.
நீண்ட காலமாகவே, பயங்கரவாதம், வன்முறைகள், உல்ஃபா தீவிரவாதம், நாகலாந்து மற்றும் மிசோரம் தனி நாடு போராட்டம் என இந்த வடகிழக்கு மாநிலங்கள் மிகவும் பின்தங்கிய நிலையிலேயே இருந்து வந்தது.
2014ம் ஆண்டு முதன் முறையாக இந்தியாவின் பிரதமராகப் பதவியேற்ற மோடி, வடகிழக்கு மாநிலங்களின் வளர்ச்சியில்தான் இந்தியாவின் வளர்ச்சி உள்ளது என்று தெரிவித்தார்.
மேலும், வடகிழக்கு மாநிலங்களில் உள்ள வளங்களும் அங்குள்ள இளைஞர்களின் திறமைகளும் புதிய இந்தியாவின் வளர்ச்சியில் முக்கியப் பங்காக அமையும் என்று கூறிய பிரதமர் மோடி, அம்மாநிலங்கள் வளர்ச்சி பெறாமல் இந்தியா வளர்ச்சி அடையாது என்று தெரிவித்தார்.
இந்தியாவின் வடகிழக்குப் பகுதிகளான எட்டு மாநிலங்களையும் ‘அஷ்டலட்சுமி’ என்று பெருமையுடன் அழைத்த பிரதமர் மோடி, நாட்டின் கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகளுக்கு இணையான வளர்ச்சியை இப்பகுதிகளுக்கும் உறுதிப்படுத்தியுள்ளார்.
அதற்காக, 2014ம் ஆண்டிலேயே ‘வடகிழக்குக்கான பிரதமரின் மேம்பாட்டு முயற்சி’ திட்டம் அறிமுகப்படுத்தபட்டது. இது உள்கட்டமைப்பின் தரம், வடகிழக்கு மக்களின் வாழ்க்கைத் தரம் ஆகிய இரண்டிலும் மிகப்பெரிய முன்னேற்றத்திற்கு வழிவகுத்தது.
இரண்டாவது முறையாக 2019 ஆம் ஆண்டு, பிரதமரான பிரதமர் மோடி, அறிமுகப் படுத்திய 100 நாள் திட்டத்தில் வட கிழக்குமாநிலங்களுக்கு 3000 கோடி ரூபாய் மதிப்புள்ள 200 புதிய திட்டங்கள் கொண்டு வரப் பட்டன.
சராசரியாக ஒரு நாளைக்கு இரண்டு திட்டங்களுக்கு 30 கோடி ரூபாய் முதலீடு என்ற Development of North Eastern Region திட்டமே வடகிழக்கு மாநில வளர்ச்சியில் பிரதமர் மோடிக்கு இருக்கும் தீவிரத்தை வெளிக் காட்டுகிறது.
கடந்த 11 ஆண்டுகளில், நாட்டின் தலைநகருக்கும் வடகிழக்குப் பகுதி மக்களுக்கும் இடையேயான தூரத்தைக் அரசு வெகுவாகக் குறைத்துள்ளது. வடகிழக்கு மாநிலங்களுக்கு அதிக முறைச் சுற்றுப் பயணம் மேற்கொண்ட இந்திய பிரதமர் என்ற பெருமையும் பிரதமர் மோடிக்கு உண்டு. இது அரசுக்கும் வடகிழக்கு மக்களுக்கும் இடையே உணர்வுபூர்வமான தொடர்பை எடுத்துக் காட்டுகிறது.
கடந்த 11ஆண்டுகளில் வடகிழக்குப் பகுதியில் சுமார் 5 ஆயிரம் கிலோமீட்டர் தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. வடகிழக்கு மாநிலங்களில் உள்ள அனைத்துத் தலைநகரங்களையும் ரயில் மூலம் இணைக்கும் பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளன. வடகிழக்கின் ஒவ்வொரு மாநிலமும் வடகிழக்கு எரிவாயு தொகுப்புடன் இணைக்கப்பட்டுள்ளன.
பாரம்பரியம், ஜவுளி, சுற்றுலா போன்றவற்றுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப் பட்டு வருகிறது. வடகிழக்கின் ஒவ்வொரு மாநிலத்திலும் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு நிரந்தர அமைதி ஏற்பட்டுள்ளது. வடகிழக்கில் வன்முறைச் சம்பவங்கள் 71 சதவீதம் குறைந்துள்ளன. வன்முறைக்குப் பலியாகும் பொதுமக்களின் மரணம் 86 சதவீதம் குறைந்துள்ளது.
2023-ல் சீன எல்லையில் சமூக மற்றும் பாதுகாப்பு கட்டமைப்பை வலுப்படுத்துவதற்காக, 4,800 கோடி ரூபாய் மதிப்பிலான Vibrant Village Programme திட்டம் கொண்டுவரப்பட்டது.
வடகிழக்கு மாநிலங்களின் கலாச்சார, சமூக மற்றும் பொருளாதாரக் கட்டமைப்பை வெளிப்படுத்தும் வகையில் கடந்த டிசம்பர் 6 ஆம் டெல்லிப் பாரத் மண்டபத்தில் மூன்று நாள் விழாவான ‘அஷ்டலட்சுமி மஹோத்சவ் 2024 பிரதமர் மோடியின் தலைமையில் சிறப்பாக நடந்தப்பட்டது.
2014-ல் சுதந்திரத்துக்குப் பிறகு 67 ஆண்டுகளுக்குப் பிறகு,மேகாலயாவும் அருணாச்சல பிரதேசமும் இந்தியாவுடன் ரயில் பாதையால் இணைக்கப் பட்டது. நாடு சுதந்திரம் அடைந்து 69 ஆண்டுகள் கழித்து 2016-ல் மணிப்பூர் முதல் இரயில் சேவைத் தொடங்கப் பட்டது. சிக்கிம் மாநிலத்தின் முதல் விமான நிலையத்தைப் பிரதமர் மோடி 2018-ல் நாட்டுக்கு அர்ப்பணித்தார். கிட்டத்தட்ட 78 ஆண்டுகளுக்குப் பிறகு மிசோரம் ,இந்தியாவின் பிற பகுதிகளுடன் இணைக்க முதல்முறையாக இரயில் சேவைத் தொடங்கப்பட்டது.
கடந்த 11ஆண்டுகளில் வடகிழக்கு மாநிலங்களின் அற்புதமான வளர்ச்சியை ஒவ்வொருவரும் கண்டு வருகிறார்கள். இந்தியாவின் வளர்ச்சியுடன் வடகிழக்குப் பகுதி மாநிலங்களை இணைக்கச் சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளையும் பிரதமர் மோடி தலைமையிலான அரசு எடுத்து வருகிறது.
முன்னதாக, வடகிழக்கின் வளர்ச்சிக்காக முதன்முறையாக முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் தலைமையிலான அரசுதான் தனி அமைச்சகத்தை உருவாக்கியது என்பது குறிப்பிடத்தக்கது.
















