பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரி தனது 10 நாள் சீனா பயணத்தின்போது, அந்நாட்டின் முக்கிய இராணுவ தொழிற்சாலையைப் பார்வையிட்டுள்ளார். இந்த நிகழ்வு இந்தியா-சீனா உறவைச் சோதிக்கக்கூடிய புதிய சவாலாகக் கருதப்படுகிறது. இது குறித்து விவரிக்கிறது இந்தச் செய்தித் தொகுப்பு…
சீனாவுடனான இராணுவ உறவை வலுப்படுத்தும் வகையில்அந்நாட்டிற்கு 10 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார் பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரி. செப்டம்பர் 14-ம் தேதி செங்க்டூ சென்ற அவர், அங்குள்ள சீன அரசின் பாதுகாப்புத் துறை நிறுவனமான AVIC வளாகத்தைப் பார்வையிட்டுள்ளார்.
J-10C போர் விமானங்கள் தயாரிக்கப்படும் அந்த வளாகத்தில், இதுவரை சர்தாரியை தவிற வேறு எந்த வெளிநாட்டுத் தலைவர்களும் சென்றதில்லை என்பது கவனிக்க வேண்டிய விஷயம். இந்நிலையில், சீனா–பாகிஸ்தான் இடையேயான ராணுவ உறவு எந்த அளவிற்கு நெருக்கமாக உள்ளது என்பதை இந்த நிகழ்வு அடிக்கோடிட்டுக் காட்டியிருக்கிறது.
இந்த நிகழ்வின்போது சர்தாரி J-10C, JF-17 தண்டர், J-20 மறைவுத்திறன் கொண்ட போர் விமானம் உள்ளிட்டவற்றின் முன்னேற்றங்களைப் பற்றிக் கேட்டறிந்து கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதேபோல, ட்ரோன்கள், தானியக்க ராணுவ அமைப்புகள், ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கண்காணிப்பு அமைப்புகள் குறித்தும் சர்தாரிக்குத் துறை சார்ந்த நிபுணர்கள் மூலம் தகவல்கள் அளிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
தொடர்ந்து சீனாவின் ராணுவ வளாகம் குறித்து பேசிய பாகிஸ்தான் அதிபர் சர்தாரி, அதனைச் சீனாவின் தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கான அடையாளம் எனவும், இரு நாடுகளின் நிலையான கூட்டுறவின் சின்னம் என்றும் புகழ்ந்துள்ளார்.
கடந்த சில ஆண்டுகளாகவே சீனாவிடம் இருந்து மிகப்பெரிய அளவில் ஆயுதங்களை வாங்கும் நாடாகப் பாகிஸ்தான் உருவெடுத்துள்ளது.
ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆய்வு நிறுவனம் வெளியிட்ட தகவலின்படி, 2020 முதல் 2024 வரை, பாகிஸ்தானின் மொத்த ஆயுத இறக்குமதியின் 81 சதவீதம் சீனாவிலிருந்தே வந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விகிதம் கடந்த 2015 – 2019 காலகட்டத்தில் 74 சதவீதமாக இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
தற்போது, பாகிஸ்தான் விமானப்படையில் 36 J-10C போர் விமானங்களும், 161 JF-17 போர் விமானங்களும் உள்ளன. மேலும், சீனாவின் ஸ்டெல்த் J-35 போர் விமானங்களை வாங்குவதற்கான பேச்சுவார்த்தைகளும் இரு நாடுகளிடையே நடைபெற்று வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
அதோடு, விண்வெளி எச்சரிக்கை அமைப்புகள், ஏவுகணைப் பாதுகாப்பு அமைப்புகள், ரேடார் மற்றும் முன்னோடியான எச்சரிக்கை விமானங்கள் குறித்தும் சீனா – பாகிஸ்தான் இடையே பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் சீனா – பாகிஸ்தான் நாடுகளிடையேயான இந்த நடவடிக்கைகள் இந்தியாவுக்கான பாதுகாப்பு சார்ந்த சவால்களைப் பெரிதும் அதிகரித்துள்ளன. கடந்த 2019-ம் ஆண்டு இந்தியா – பாகிஸ்தான் இடையே நடந்த வான்வழி மோதலின்போது, சீனாவின் J-10 போர் விமானங்களைப் பாகிஸ்தான் பயன்படுத்தியதாகச் செய்திகள் வெளியாகியிருந்தன.
அந்த நிகழ்வு, சீன ஆயுதத் தொழில்துறையை விளம்பரப்படுத்தும் வகையில் இருந்ததாக அப்போது பாதுகாப்பு துறைச் சார்ந்த வல்லுநர்கள் கருத்து தெரிவித்திருந்தனர். இதற்கிடையே நீண்ட நாட்களுக்குப் பின்னர் இந்தியா – சீனா உறவை மீண்டும் மேம்படுத்தும் முயற்சிகள் இரு நாடுகளிடையே நடைபெற்று வரும் நிலையில், சீனா பாகிஸ்தானுக்கு வழங்கும் மேம்பட்ட ஆயுதங்கள், டெல்லி – பீஜிங் உறவின் நம்பகத்தன்மையைச் சோதிக்கும் வகையில் இருப்பதாகப் பாதுகாப்பு துறைச் சார்ந்த நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
அண்மையில் நடந்த மோடி – ஜி ஜின்பிங் சந்திப்பின்போது, இரு நாடுகளும் இனி போட்டியாளர்கள் அல்ல, கூட்டாளிகள் என்பதை உறுதிபடுத்தியிருந்தனர். ஆனால், தற்போது பாகிஸ்தானுக்குச் சீனா வழங்கி வரும் ஆதரவு, இந்தியா – சீனா உறவை எந்த வகையில் பாதிக்கப்போகிறது என்பது எல்லைப் பாதுகாப்பு ரீதியாகவும், புவிசார் அரசியல் ரீதியாகவும் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
சீனாவின் பாகிஸ்தான் ஆதரவு நிலைபாட்டை இந்தியா அத்தனைச் சாதாரணமாக புறக்கணித்துவிட முடியாது என எச்சரித்துள்ள வல்லுநர்கள், பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரியின் இந்தச் சீன சுற்றுப்பயணம், ஒரு சாதாரண அரசியல் விஜயம் அல்ல எனவும், இது இந்தியா – சீனா – பாகிஸ்தான் ஆகிய மூன்று நாடுகளின் பாதுகாப்பு சமன்பாட்டை மாற்றக்கூடிய முக்கிய நிகழ்வு என்றும் கருத்து தெரிவித்துள்ளனர்.