மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மழைநீர் வடிகால்களில் குப்பைகள் தேங்கிச் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளதாக மக்களை வேதனைத் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து விரிவாகப் பார்க்கலாம் இந்தச் செய்தித்தொகுப்பில்..,
மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட வார்டுகளில் மழை நீர் வடிகால்கள் பல மாதங்களாகத் தூர்வாரப்படாமல் இருக்க, பிளாஸ்டிக் மற்றும் குப்பைகள் தேங்கிச் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.
மதுரை மாநகராட்சியின் அனைத்துப் பகுதிகளிலும் பாதாளச் சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட்ட நிலையில், மழைநீர் வடிகால்களில் கழிவுநீர் ஓடுவதாக மக்கள் வேதனைத் தெரிவிக்கின்றனர். இதனால் கொசு உற்பத்தி பெருகி, நோய் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் மக்கள் கவலையுடன் கூறுகின்றனர்.
மதுரை மாநகரின் பந்தல்குடி கால்வாய், நிலையூர்க் கால்வாய் என அனைத்துப் பாசன கால்வாய்களையும் கழிவுநீர்க் கால்வாய்களாக மாநகராட்சி நிர்வாகம் மாற்றியுள்ளது எனக் குற்றம்சாட்டியுள்ள மக்கள், மாநகரின் சுற்றுச்சூழல் முழுவதும் கெட்டு போயுள்ளதாக ஆதங்கத்துடன் தெரிவிக்கின்றனர்.
மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனை முன்பு செல்லக்கூடிய வடிகால்களில் பிளாஸ்டிக் கழிவுகள், குப்பைகள் தேங்கி நிற்பதால், கொசு உற்பத்தி ஆகி மருத்துவமனைக்கு வருபவர்களுக்குத் தொற்று நோய் ஏற்படுவதாகவும் அதிருப்தி தெரிவிக்கின்றனர்.
பருவமழைத் தீவிரமடையும் முன்னரே கால்வாய்களைச் சரியாக தூர்வார வேண்டும் எனவும், மழைநீர் வடிகால் கட்டுமான பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.