கர்நாடக மாநிலம் விஜயபுராவில் உள்ள எஸ்பிஐ வங்கியில் புகுந்த மர்மநபர்கள் துப்பாக்கி மற்றும் கத்தியை காட்டி ஒரு கோடி ரூபாய் மற்றும் 13 கிலோ தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
மகாராஷ்டிரா எல்லையை ஒட்டியுள்ள விஜயபுரா மாவட்டம் சடசனா தாலுகாவில் எஸ்பிஐ வங்கி ஒன்று செயல்பட்டு வருகிறது.
இந்த வங்கியில் நேற்றிரவு ஊழியர்கள், பணியை முடித்துக் கொண்டு வீட்டுக்குப் புறப்பட தயாராகினர்.
அப்போது வங்கிக்குள் ராணுவத்தினரைப் போன்று உடை அணிந்து வந்த மர்மநபர்கள் நாட்டு துப்பாக்கி, கத்தி உள்ளிட்ட ஆயுதங்களைக் காட்டி, வங்கி மேலாளர் மற்றும் ஊழியர்களை மிரட்டினர்.
தொடர்ந்து வங்கி ஊழியர்களைக் கட்டி போட்ட கொள்ளையர்கள், லாக்கரில் இருந்த பணம், தங்க நகைகளைக் கொள்ளையடித்துக் கொண்டு, வாகனங்களில் தப்பி சென்றுள்ளார்.
முதற்கட்ட விசாரணையில் ஒரு கோடி ரூபாய் ரொக்கம், 13 கிலோ தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது தெரிய வந்துள்ளது. சிசிடிவி காட்சிகளைக் கொண்டு கொள்ளையர்களைப் போலீசார் தேடிவருகின்றனர்.