ஏங்க ஏங்க எனக் கூறியே இணையத்தில் ட்ரெண்டான கூமாபட்டி இளைஞர் எலும்பு முறிவு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.
விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு பகுதியில் அமைந்துள்ள சிறிய கிராமம் கூமாபட்டி. இயற்கைச் சூழல் நிறைந்த இந்தக் கிராமம், தங்கப்பாண்டி என்பவரின் இன்ஸ்டாகிராம் ரீல்சால் டிரென்ட் ஆனது. “ ஏங்க கூமாபட்டி வாங்க… சொர்க்கப் பூமிங்க” …“ தண்ணீயப் பாருங்க சர்பத்து மாறிங்க” எனத் தங்கப்பாண்டி வெளியிட்ட ரீல்ஸ் வீடியோ கூமாபட்டிக்குச் சுற்றுலா பயணிகளைப் படையெடுக்க செய்தன…
இதில் பிரபலமான தங்கப்பாண்டித் தற்போது தனியார் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். மேலும் அவருக்கு விளம்பர வாய்ப்புகளும் குவிந்து வருகின்றன. இந்த நிலையில் கூமாபட்டி தங்கபாண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சென்னையில் படப்பிடிப்பை முடித்துவிட்டுச் சொந்த ஊருக்குத் திரும்பிய போது, திடீரெனப் பிரேக் பிடித்ததால் பேருந்து கதவில் மோதிய தங்கப்பாண்டிக்குத் தோள்பட்டையில் எலும்பு முறிவு ஏற்பட்டது.
ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் கூமாபட்டி தங்கப்பாண்டி விரைந்து குணம் பெற வேண்டும் எனப் பலரும் இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர்.