மகாராஷ்டிரா மாநிலத்தில் 27 வயதான இளம் பெண் ஒருவர், ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளைப் பெற்றெடுத்துள்ளார்.
சத்தாரா மாவட்ட அரசு மருத்துவமனையில் காஜல் விகாஸ் ககுர்தியா என்ற கர்ப்பிணி ஒருவர் மூச்சுத்திணறல் மற்றும் பிரசவ வலியுடன் அனுமதிக்கப்பட்டார்.
டாக்டர்கள் மேற்கொண்ட பரிசோதனையில், அந்தப்பெண் 4 குழந்தைகளை வயிற்றில் சுமந்தது தெரியவந்தது.
எனவே நிலைமையின் தீவிரத்தையும், தாயின் பலவீனமான உடல்நிலையையும் கருத்தில் கொண்டு உடனடியாக அறுவை சிகிச்சை மேற்கொள்ள மருத்துவர்கள் முடிவு செய்தனர்.
மருத்துவமனை டீன் விநாயக் காலே வழிகாட்டுதலின்படி நடைபெற்ற அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டு, 4 குழந்தைகளும் ஆரோக்கியத்துடன் பிறந்தன.
ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள் பிறப்பது அரிதிலும், அரிதான நிகழ்வு என்றும், 10 லட்சத்தில் இருந்து 5 கோடி பிரசவத்திற்கு ஒருமுறை மட்டுமே இதுபோன்ற நிகழ்வு நடைபெறுவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இத்தோடு 7 குழந்தைகளுக்கு தாயாகி உள்ள காஜல் விகாஸ் ககுர்தியாவுக்கு இது 3-வது பிரசவம். 2-வது பிரசவத்தின் போது அவர் இரட்டைக் குழந்தைகளை பெற்றெடுத்தார் என்பது கூடுதல் சுவாரஸ்யத் தகவல்.