பாகிஸ்தான் மற்றும் சவுதி அரேபியா இடையே முக்கிய பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது
சவுதி அரேபியாவின் அண்டை நாடான கத்தாரில் உள்ள ஹமாஸ் தலைவர்களை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், பாகிஸ்தான் மற்றும் சவுதி அரேபியா இடையே பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.
ரியாத்தில் உள்ள அரச மாளிகையில், சவுதி இளவரசர் முகமது பின் சல்மானை சந்தித்து பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் பேச்சுவார்த்தை நடத்தினார்.
பின்னர், இருவரும் இருநாடுகள் இடையேயான முக்கிய பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
பாகிஸ்தான் அல்லது சவுதி அரேபியாவுக்கு எதிரான எந்தவொரு தாக்குதலும் மற்ற நாட்டின் மீதான நேரடித் தாக்குதலாகக் கருதப்படும் என அந்த ஒப்பந்தம் தெரிவித்துள்ளது.
மேலும், பிராந்திய பாதுகாப்பு மற்றும் நிலைத்தன்மையை வலுப்படுத்துவதற்கும் ஒப்பந்தத்தில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.