மதுரை மாநகராட்சியில் தூய்மை பணியாளர்களின் போராட்டத்தால் தூய்மை பணி முடங்கி குப்பைகள் தேங்கியுள்ளன.
மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட 100 வார்டு பகுதிகளில் தூய்மை பணிகளை மேற்கொள்வதற்காக OURLAND என்ற தனியார் ஒப்பந்தம் நிறுவனம் மூலம் ஒப்பந்த பணியாளர்களை நியமித்துப் பணி நடைபெறுகிறது.
இந்நிலையில் OURLAND ஒப்பந்த நிறுவனத்தினர் ஐந்து ஓட்டுநர்களைப் பணி நீக்கம் செய்ததாகக் கூறி வாகன ஓட்டுனர்கள், மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் தொழிற்சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் OURLAND நிறுவன மேலாளர்கள் தங்களைச் சாதிய ரீதியாக அவதூறாகப் பேசியதாக கூறி செல்லூர்க் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
மறுபுறம் 500க்கும் மேற்பட்ட வாகனங்களின் சாவிகளை தொழிற்சங்கத்தினர் அலுவலகத்துக்குள் புகுந்து எடுத்துச் சென்றதாகச் சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனம் சார்பில் மதுரை மாநகரக் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.
இந்த விவகாரத்தில் மதுரை மாநகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்காத நிலையில் மாநகரப் பகுதி முழுவதிலும் குப்பைகள் தேங்கியுள்ளன.