அதானி குழுமம் மீது ஹிண்டன்பர்க் நிறுவனம் முன்வைத்த குற்றச்சாட்டுகளை செபி நிராகரித்துள்ளது.
இந்தியாவின் பெரும் தொழில் நிறுவனமான அதானி குழுமம், பங்கு விலையை செயற்கையாக அதிகரித்ததாக ஹிண்டன்பர்க் நிறுவனம் குற்றம் சாட்டியிருந்தது.
அத்துடன் அதானி குழுமத்திற்கு தொடர்புடைய வெளிநாட்டு நிறுவனங்களில் இந்தியாவின் பங்கு வர்த்தக ஒழுங்குமுறை அமைப்பான செபியின் முன்னாள் தலைவர் மாதபி புச் மற்றும் அவரது கணவர், பங்குகள் வைத்துள்ளதாக தெரிவித்தது.
இந்திய பங்குச்சந்தையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய ஹிண்டன்பர்க் நிறுவனத்தின் இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து செபி விரிவான விசாரணை நடத்தியது. இந்நிலையில், எந்த விதிமீறல்களும் நடைபெறவில்லை எனக்கூறி ஹிண்டன்பர்க் நிறுவனத்தின் குற்றச்சாட்டுகளை செபி நிராகரித்துள்ளது.
இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அதானி குழுமத்தின் தலைவர் கெளதம் அதானி, ஹிண்டன்பர்க் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்பதை செபி மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளதாக கூறியுள்ளார்.
வெளிப்படைத் தன்மையும், நேர்மையும் அதானி குழுமத்தை வரையறுத்துள்ளதாகவும், ஹிண்டன்பர்க் அறிக்கையால் பணத்தை இழந்த முதலீட்டாளர்களின் வலியை உணர்வதாகவும் தெரிவித்துள்ளார்.
தவறான கதைகளைப் பரப்பியவர்கள் மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தியுள்ள கெளதம் அதானி, இந்திய மக்கள் மற்றும் தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கான தங்கள் அர்ப்பணிப்பு அசைக்க முடியாததெனவும் தெரிவித்துள்ளார்.