பாகிஸ்தான் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் நிலையில், அந்நாட்டின் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்புக்காகப் புதியதாக சொகுசு ஜெட் தயாரிக்க ஒப்புதல் வழங்கப்பட்ட சம்பவம் அந்நாட்டினரிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து பெற்ற கடன் சுமைகளால் தத்தளிக்கும் பாகிஸ்தான் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. அந்நாட்டில் வசிக்கும் லட்சக்கணக்கான மக்கள் 3 வேளை உணவு கிடைக்காமல் அல்லாடி வருகின்றனர்.
இந்நிலையில் அந்நாட்டின் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் பயணிக்கப் புதிதாக சொகுசு ஜெட் தயாரிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது பேசுபொருளாகியுள்ளது.
இதற்காக அந்நாட்டு விமானப்படைக்குச் சொந்தமான A-1102 ஏர்பஸ் 319 எனும் ஏர் ஆம்புலன்ஸை மறுவடிவமைப்பு செய்ய அந்நாட்டு விமான தளபதி ஜாகீர் அகமது பாபர்ச் சித்து ஒப்புதல் அளித்துள்ளார்.
இந்த விமானத்தில் உயர்நிலை ஓய்வறைகள், படுக்கையறைகள், அதிநவீனத் தகவல் தொடர்பு அமைப்புகள் இடம்பெறவுள்ளன.
சில மாதங்களுக்கு முன்பு இந்தியாவுடன் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து விமானப்படைத் தளபதியின் பதவிக் காலத்தை ஷெபாஷ் ஷெரீப் நீட்டித்தார்.
இதனால் அவரை மகிழ்விப்பதற்காக விமான ஆம்புலன்ஸை, சொகுசு ஜெட் விமானமாக மாற்றும் முடிவு எடுக்கப்பட்டதாகக் கூறப்படுவது, அந்நாட்டு மக்களை கொதிப்படைய செய்துள்ளது.