‘வீரத்துறவி’ இராமகோபாலன் பிறந்தநாளை முன்னிட்டு, பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், மத்திய அமைச்சர் எல். முருகன், பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இது குறித்து பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
தமிழ்நாட்டில் மதமாற்றங்களுக்கு எதிராக தொடர் போராட்டங்களை நடத்தி அதில் வெற்றி பெற்று, இந்து மதத்தின் காவலராக திகழ்ந்த கவிஞர், பாடகர், எழுத்தாளர், சொற்பொழிவாளர், பத்திரிகையாளர், மொழிபெயர்ப்பாளர் என பன்முகம் கொண்ட, இந்து முன்னணி நிறுவனர் வீரத்துறவி அமரர் திரு. ராமகோபாலன் ஜி அவர்களின் பிறந்தநாள் இன்று! பல ஆண்டுகள் ஓடாமல் இருந்த திருவாரூர் தேரை ஓடவைத்த பெருமைக்குரியவர்.
தன் வாழ்நாள் முழுவதும் பல்வேறு கொலைமுயற்சிகளை வெற்றிகரமாக முறியடித்தவர். பெண்களே சக்தியின் வடிவம் எனக் கருதியதுடன், திருவிளக்கு பூஜையின் வழியாக ஹிந்து பெண்களை ஒருங்கிணைத்தவர். இன்றைய தினத்தில், வீரத்துறவி அமரர் ராமகோபாலன் ஜி அவர்களின் புகழைப் போற்றி வணங்குவோம்! என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து மத்திய அமைச்சர் எல். முருகன் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
இந்து முன்னணி அமைப்பின் நிறுவன தலைவரும், இந்து சமுதாய மக்களுக்காக ஓயாது குரல் கொடுத்தவருமான ‘வீரத்துறவி’ இராமகோபாலன் அய்யா அவர்களின் பிறந்த தினம் இன்று.
தனது தொடக்க காலங்களில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் தீவிர சேவகராக தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர், தமிழகத்தில் இந்து முன்னணி அமைப்பை நிறுவியதன் மூலம், இந்து சமுதாய மக்களை ஒருங்கிணைக்கும் ஒப்பற்ற பணிகளை இடையறாது மேற்கொண்டார்.
1982-ஆம் ஆண்டில், இராமநாதபுரம் மாவட்டத்தில் நடைபெற்ற மதமாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, கடுமையாக குரல் கொடுத்த அய்யா இராமகோபாலன் அவர்கள், கோவில்களையும் கோவில் சொத்துக்களையும் பாதுகாப்பதை தனது பெரும் கடமையெனக் கருதி செய்து வந்தார்.
தமிழகம் முழுவதும் இன்றளவும் மிகுந்த வரவேற்போடு விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்கள் நடைபெறுவதற்கு வித்திட்டவர் அய்யா அவர்கள். சித்தாந்த வேறுபாடுகளின்றி, தமிழகத்தின் அனைத்துக் கட்சியினராலும் மதிக்கப்பட்ட ‘வீரத்துறவி’ இராமகோபாலன் அய்யா அவர்களின் பிறந்த தினத்தில், அவர் சமுதாயத்திற்கு ஆற்றிய பங்களிப்புகளை நினைவு கூர்வோம்..! என்று எல். முருகன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
தேசப்பணிக்கும், தெய்வப்பணிக்கும் இலக்கணமாகத் திகழ்ந்த, இந்து முன்னணி அமைப்பின் நிறுவனர் அமரர் திரு. ராமகோபாலன் அவர்களது பிறந்த தினம் இன்று.
இந்து ஒற்றுமை மாநாடுகளை நடத்தி இந்து மக்களுக்கு இடையிலான சாதிய நிலைகளைக் களையச் செய்தவர். இந்து மக்களின் நலனுக்காகத் தனது வாழ்நாள் முழுவதையும் தியாகம் செய்த மாமனிதர்.
விவேகானந்தர் வழிநடந்த வீரத்துறவி ஐயா திரு. ராமகோபாலன் அவர்களின் புகழைப் போற்றி வணங்குகிறோம் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.