பிரதமரின் சேவைகள் குறித்த குறும்படத்தை பெற்றோர் குழந்தைகளுடன் வந்து பார்க்க வேண்டும் என பாஜக மாநில செயலாளர் வினோஜ் பி.செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடியின் 75வது பிறந்த நாளையொட்டி பாஜக சார்பில் சேவை இருவாரம் நிகழ்வுகள் கொண்டாடப்பட்டு வருகின்றன. அந்த வகையில், பிரதமர் மோடியின் சேவை மகத்துவத்தை வெளிப்படுத்தும் விதமாக “சலோ ஜீதே ஹைன்” என்ற குறும்படம் சென்னை, கோவை, சேலம், வேலூர், கடலூர் ஆகிய நகரங்களில் மறு வெளியீடு செய்யப்பட்டுள்ளது.
வாரத்தின் 5 நாட்களும் மாலை 6 மணிக்கு பொதுமக்களுக்கு இலவசமாக இந்த குறும்படம் திரையிடப்படும் நிலையில், சென்னையில் உள்ள சத்யம் திரையரங்கில் குறும்படத்தை பாஜக மாநில துணைத் தலைவர் சக்கரவர்த்தி, மாநில செயலாளர்கள் வினோஜ் பி செல்வம், கராத்தே தியாகராஜன் உள்ளிட்டோர் பார்வையிட்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வினோஜ் பி.செல்வம், பிரதமரின் சேவைகள் பொதுமக்களுக்கு நிச்சயம் தெரிய வேண்டும் என கூறினார். பெற்றோர்கள் இந்த குறும்படத்தை குழந்தைகளுடன் வந்து பார்க்க வேண்டும் எனக்கூறிய அவர், அப்போதுதான் பிரதமரின் சேவை மனப்பான்மை மாணவர்கள் மத்தியில் நிச்சயம் தெரியவரும் என தெரிவித்தார்.