நடிகர்கள், தொழிலதிபர்கள், பிரபலங்கள் எனப் பலர் அரசியலில் கால் பதித்ததை நாம் பார்த்துள்ளோம். ஆனால், முதன்முறையாக ஏ.ஐ.யும் தற்போது அரசியலில் கால் பதித்துள்ளது. எங்கு நடந்தது இந்தச் சுவாரஸ்ய சம்பவம். இந்தச் செய்தி தொகுப்பில் பார்க்கலாம்..
ஜப்பானில் Path to Rebirth என்ற பெயரில் ஒரு அரசியல் கட்சி உள்ளது. மேற்கு ஜப்பானில் முன்னாள் மேயராக இருந்த ஷின்ஜி இஷிமாரு என்பவர் கடந்தாண்டு இந்தக் கட்சியை தொடங்கினார். ஜப்பானில் நடைபெற்ற அனைத்துத் தேர்தல்களில் போட்டியிட்ட இந்தக் கட்சி, தனித்துவமான ஆன்லைன் பிரச்சாரம் மூலம் பலரது கவனத்தை ஈர்த்தது.
குறிப்பாக, டோக்கியோவில் நடைபெற்ற ஆளுநர் தேர்தலிலும் Path to Rebirth கட்சி களம் கண்டது. அசுரத்தனமான ஆன்லைன் பிரசாரத்தைப் பயன்படுத்தி இந்தக் கட்சி 2ஆவது இடத்தைப் பிடித்தது. தொடங்கப்பட்ட சில மாதங்களிலேயே முக்கிய தேர்தலில் 2ம் இடம்பிடித்தது தேசிய அளவில் பேசுபொருளானது.
டோக்கியோ ஆளுநர் தேர்தலில் கிடைத்த அங்கீகாரத்தால் உற்சாகமடைந்த ஷின்ஜி இஷிமாரு, ஜப்பானில் நடைபெற்ற மேல்சபைத் தேர்தலும் போட்டியிட்டார். ஆனால், அவரது கட்சி இந்த முறைப் படுதோல்வியடைந்தது. எந்தத் தொகுதியிலும் வெற்றிக் கிடைக்கவில்லை.
இதனால், மனஉளைச்சல் அடைந்த அவர், தோலவிக்குப் பொறுப்பேற்று தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். அவரைத் தொடர்ந்து, கோகி ஒகுமுரா என்ற 25 வயது இளைஞர் கட்சியின் தற்காலிகத் தலைவராக நியமிக்கப்பட்டார்.
அவர்தான் தற்போது புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு, அரசியல் உலகைத் திடுக்கிட செய்துள்ளார். Path to Rebirth கட்சியின் அடுத்த தலைவராக இனி மனிதர்கள் யாருக்கும் இருக்க மாட்டார்கள் எனவும், ஏஐ-தான் இனி தலைவராக இருந்து தங்களை எல்லாம் வழிநடத்த போகிறது எனவும் அவர் தெரிவித்துள்ளார். அந்த ஏஐ தலைவருக்கு, தான் உதவியாளராக செயல்பட போவதாகவும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.
ஜப்பானிய மக்கள் விலங்குகள் மீது கொண்டுள்ள அன்பை பிரதிபலிக்கும் வகையில், இந்த ஏஐ-க்கு பென்குயினின் வடிவம் வழங்கப்படும் என Path to Rebirth தெரிவித்துள்ளது. மற்ற நாடுகளை போலவே, ஜப்பானிலும் அந்நாட்டுக் குடிமக்கள் மட்டும்தான் போட்டியிட முடியும். எனவே, Path to Rebirth கட்சியின் புதிய தலைவரான ஏஐ, எந்தத் தேர்தல்களிலும் போட்டியிடாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை லட்சக்கணக்கான ஊழியர்களின் பணிகளை மட்டும் replace செய்து வந்த ஏஐ, தற்போது தலைமை பொறுப்பில் இருப்பவர்களையும் replace செய்யத்தொடங்கியுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.