இந்து முன்னணி மாநில அமைப்பாளர் வேலுார் வெள்ளையப்பன் மற்றும் பாஜக நிர்வாகி ஆடிட்டர் ரமேஷ் கொலை வழக்கில் பயங்கரவாதி அபுபக்கர் சித்திக் கைது செய்யப்பட்டார்.
நாகையைச் சேர்ந்த பயங்கரவாதியான அபுபக்கர் சித்திக் என்பவர் மீது இந்து அமைப்பு மற்றும் பாஜக நிர்வாகிகள் கொலை செய்யப்பட்டது தொடர்பான வழக்குகள் உள்ளன. கோவை தொடர் குண்டுவெடிப்பு, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் குண்டு வைத்தது, மதுரை வந்த பாஜக மூத்த தலைவர் அத்வானியை வெடிகுண்டு வைத்து கொலை செய்ய முயன்றது உள்ளிட்ட வழக்குகளும் உள்ளன. 30 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்து வந்த அபுபக்கர் சித்திக் கடந்த ஜூலை 1ஆம் தேதி ஆந்திராவில் கைது செய்யப்பட்டார்.
புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அபுபக்கரை 6 நாட்கள் காவலில் எடுத்து தமிழக பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். அதில், இந்து முன்னணி மாநில அமைப்பாளர் வேலுார் வெள்ளையப்பன், பாஜக நிர்வாகி ஆடிட்டர் ரமேஷ் கொலை வழக்குகளில் அபுபக்கர் சித்திக் மூளையாக செயல்பட்டது தெரியவந்தது.
இதனை தொடர்ந்து, அபுக்கர் சித்திக்கை போலீசார் மீண்டும் கைது செய்தனர். இந்த வழக்குகள் தொடர்பாகவும், அவரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்.