தமிழகத்தில் உள்ள 4 அரசு மருந்தியல் கல்லுாரிகளில் 2 பேராசிரியர்கள் மற்றும் ஒரு இணை பேராசிரியர் மட்டுமே பணியாற்றுவதால் மாணவர்களின் கல்வி தரம் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
சென்னை, மதுரை, கோவை, தஞ்சாவூர் ஆகிய அரசு மருத்துவக் கல்லுாரிகளில், மருந்தியல் படிப்புகளுக்கான கல்லுாரிகளும் தனியாக இயங்கி வருகின்றன.
மருந்தாளுநர் படிப்புகளுக்கான 9 பேராசிரியர் பணியிடங்களில், 7 இடங்கள் காலியாக உள்ள நிலையில், தற்போது, 2 பேராசிரியர்கள் மட்டுமே பணியில் உள்ளதாகவும், இணை பேராசிரியர் பணியிடங்களில் 17 இடங்கள் காலியாக இருப்பதாகவும் அரசு மருந்தியல் பேராசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.
10 ஆண்டுகளுக்கும் மேலாக பேராசிரியர் பணியிடங்கள் காலியாக இருப்பதால், மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்க முடிவதில்லை என கூறியுள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் 10க்கும் மேற்பட்ட தனியார் மருந்தியல் கல்லுாரிகள் புதிதாக வருகின்றன என்றும், 60 ஆண்டுகளில் ஒரு மருந்தியல் கல்லுாரியை கூட அரசு புதிதாக ஏற்படுத்தவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், அரசின் செயல்பாடு, தனியார் கல்லுாரிகளுக்கு சாதகமான சூழலை ஏற்படுத்தி உள்ளது என, மருந்தியல் பேராசிரியர்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.