மனிதநேய ஜனநாயகக் கட்சி, கொங்குநாடு தேசிய கட்சி உள்ளிட்ட தமிழகத்தில் செயல்பாட்டில் இல்லாத 42 கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்து இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 6 ஆண்டுகளாக எந்தவொரு தேர்தலிலும் போட்டியிடாத அரசியல் கட்சிகளை கண்டறிந்து அவற்றை நீக்குவதற்கான நடவடிக்கையை தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளது.
இதில் எந்தக் கட்சிகளையும் தேவையில்லாமல் நீக்கிவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருந்த தேர்தல் ஆணையம், சம்பந்தப்பட்ட கட்சிகளுக்கு விளக்கம் கேட்டும் நோட்டீஸ் அனுப்பியது.
அதன் தொடர்ச்சியாக நாடு முழுவதும் 474 கட்சிகள் நீக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் மட்டும் 42 கட்சிகளின் பதிவு ரத்து செய்யப்பட்டுள்ளன.
அதில் அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழகம், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, மனிதநேய ஜனநாயகக் கட்சி,
சமத்துவ மக்கள் கழகம், பெருந்தலைவர் மக்கள் கட்சி உள்ளிட்ட தமிழகத்தை சேர்ந்த 42 கட்சிகளின் அங்கீகாரங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.