கனடாவின் தேசிய பாதுகாப்பு மற்றும் புலனாய்வு ஆலோசகர் நத்தலி ட்ரூயின், இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இதன் மூலம் இருநாடுகளுக்கும் இடையே மீண்டும் உறவு வலுப்படும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
கடந்த சில ஆண்டுகளாகவே இந்தியா- கனடா உறவு சுமுகமாக இல்லாமல் இருந்தது. இந்தியாவில் தடை செய்யப்பட்ட காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பின் தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கனடாவில் படுகொலைச் செய்யப்பட்டார். இந்தப் படுகொலையில் இந்தியாவுக்குத் தொடர்பு இருப்பதாக அப்போதைய கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம்சாட்டினார்.
இந்தக் குற்றச்சாட்டுகளை முழுமையாக நிராகரித்த இந்தியா, அவற்றை முட்டாள்தனமானவை என்றும், உள்நோக்கம் கொண்டவை என்றும் தெரிவித்திருந்தது. இந்தியாவில் தேசத் துரோக குற்றங்களுக்காகத் தேடப்படும் காலிஸ்தான் பயங்கரவாதிகளுக்குக் கனடா புகலிடம் அளிப்பதாக இந்தியா ஆதாரப்பூர்வமாகக் குற்றம் சாட்டியது.
காலிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கோ, அவர்களைக் கைது செய்து, இந்தியாவுக்கு அழைத்து வந்து வழக்கு நடத்துவதற்குக் கனடா அரசிடமிருந்து எந்த உதவியும் கிடைக்கவில்லை என்றும் இந்தியா கூறிவந்தது.
இதனைத் தொடர்ந்து இரு நாடுகளும் தூதரக அதிகாரிகளை நாட்டை விட்டு வெளியேற்றின. இந்தியா கனடாவுக்கு அளித்து வந்த விசா சேவையை நிறுத்தி வைத்தது. இரு நாடுகளுக்கும் இடையேயான உறவு மிகவும் மோசமான நிலையை எட்டியது.
இந்நிலையில் உட்கட்சி அழுத்தம் காரணமாக லிபரல் கட்சியின் தலைவர் பதவியிலிருந்து ராஜினாமா செய்தார் முன்னாள் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ. கனடாவில் ஜஸ்டின் ட்ரூடோவின் 9 ஆண்டு ஆட்சி முடிவுக்கு வந்த நிலையில், புதிய பிரதமராக மார்க் கார்னி பதவியேற்றார்.
இந்த ஆண்டின் தொடக்கத்தில், பிரதமர் மோடியுடன் தொலைபேசியில் பேசிய கனடா பிரதமர் மார்க் கார்னி இருநாடுகளுக்கும் இடையேயான நீண்டகால உறவை மீண்டும் உறுதிப்படுத்தினார்.தொடர்ந்து,கனடாவில் நடந்த G7 உச்சிமாநாட்டின் போதும் இரு நாட்டு தலைவர்களும் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். மீண்டும் இரு நாடுகளும் தங்களது தூதர்களை நியமித்தன.
இந்நிலையில், கடந்த 18 ஆம் தேதி டெல்லி வந்திருந்த கனடாவின் தேசிய பாதுகாப்பு மற்றும் புலனாய்வு ஆலோசகர் ( Nathalie Drouin ) நத்தலி ட்ரூயின்,இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
இருநாட்டுத் தலைவர்களும் முன்னெடுத்த இருதரப்பு உறவுகளை மீட்டெடுக்கவும் இருவரும் ஒப்புக்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப் பட்டுள்ளது.
வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பயங்கரவாத எதிர்ப்பு, நாடுகடந்த ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களை எதிர்த்துப் போராடுதல் மற்றும் உளவுத்துறை பரிமாற்றங்கள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்தும், எதிர்கால ஒத்துழைப்புக்கான முன்னுரிமைகள் பற்றியும் இரு தேசிய பாதுகாப்பு ஆலோசகர்களும் விவாதித்ததாகக் கூறப்பட்டுள்ளது.
















