பீகாரில் வேளாண் துறையில் பல்வேறு சாதனைகளைப் படைத்த வரும் பெண் ஒருவர், அம்மாநில மக்களால் காளான் லேடி எனப் பிரியமாக அழைக்கப்படுகிறார். மத்திய, மாநில அரசுகளும், அவரது பணியைப் பாராட்டி பல்வேறு விருதுகளை வழங்கிக் கவுரவித்துள்ளன. அப்படி அவர் என்ன செய்தார். இந்தத் தொகுப்பில் பார்க்கலாம்.
பீகாரின் முங்கர் என்ற மாவட்டத்தில் உள்ள குக்கிராமத்தைச் சேர்ந்தவர் பினா தேவி. ஒரு காலத்தில் அடுத்த வேலை உணவிற்கே வழியில்லாமல் தவித்து வந்த அவர், தனது குழந்தைகளை வளர்க்கவும் சிரமப்பட்டு வந்தார். குடும்பத்தின் பொருளாதாரச் சூழல், அவரது குழந்தைகள் தரமான கல்வி கற்பதற்கும் தடையாக இருந்தது.
குடும்பத்தைக் காக்க ஏதாவது வேலைச் செய்யலாம் என முடிவெடுத்த பினா தேவிக்கு, காளான் வளர்ப்பில் ஈடுபட்டால் என்ன என்ற கேள்வி எழுந்தது. ஆனால், காளான் விதைகளை வாங்க கூட பணமில்லை. எப்படியோ சிறிய தொகையைப் புரட்டினார். அதனைக் கொண்டு ஒரு கிலோ காளான் விதைகளை மட்டுமே வாங்க முடிந்தது.
காளான் வளர்ப்பில் ஈடுபட்டவுடன்தான் தெரிந்தது, அதற்கு ஏற்ற ஈரப்பதம், வெப்பநிலை உள்ளிட்டவைத் தேவை என்பது. இருந்தபோதும் சோர்வடையாமல், அருகில் உள்ள வேளாண் பல்கலைக்கழகத்திற்குச் சென்ற பினா தேவி, காளான் வளர்ப்பு குறித்து முறையாக அறிந்துகொண்டார்.
சில ஆண்டுகளில் காளான் வளப்பு பெரிய லாபத்தைக் கொடுத்தது. குடும்ப வறுமை நீங்கியது. அவரது குழந்தைகளுக்கு மிகச் சிறந்த கல்வி கிடைக்கத் தொடங்கியது.
இதனைத் தொடர்ந்து அவர்ச் செய்த செயல்தான் அவரை, பீகாரின் காளான் லேடியாக உயர்த்தியது.
தனது கிராமத்தில் பெரும்பாலான பெண்கள் வறுமையில் வாடி வருவதைக் கவனித்த அவர், அவர்களுக்கும் காளான் வளர்ப்பு குறித்து கற்றுகொடுக்க முன்வந்தார். பின்னர் அருகில் உள்ள மற்ற கிராம பெண்களுக்கும் காளான் வளர்ப்பை அவர் கற்பித்தார். அவரது இந்த முயற்சியால், இன்றைய தேதிக்குப் பீகாரில் சுமார் 100 கிராமங்களை சேர்ந்த பெண்களின் முக்கிய வருவாய் ஆதாரமாகக் காளான் வளர்ப்பு மாறியுள்ளது.
சுயதொழிலால் தானும் முன்னேறி, மற்ற பெண்களையும் முன்னேற்றிய பினா தேவிக்கு, பீகார் அரசு சிறந்த பெண் விவசாயிக்கான விருது வழங்கிக் கவுரவப்படுத்தியது. 2020ம் ஆண்டு சர்வதேச மகளிர் தினத்தன்று அப்போதைய குடியரசுத் தலைவரான ராம்நாத் கோவிந்த், பினா தேவியை நேரில் அழைத்துப் பாராட்டிய நிலையில், பிரதமர் மோடியும் தனது மனதின் குரல் நிகழ்ச்சி மூலம் பினா தேவியை நாடறிய செய்தார். தற்போது காளான் வளர்ப்பைத் தாண்டி, இயற்கை விவசாயம் குறித்த விழிப்புணர்வையும் அவர் ஏற்படுத்தி வருகிறார்.
“நான் இதுவரைச் சுமார் 70 ஆயிரம் பெண்களுக்குக் காளான் வளர்ப்பு குறித்து கற்பித்துள்ளேன். நான் சுயதொழில் தொடங்கியபோது எனது செயலை பலர் பைத்தியக்காரத்தனமானது எனக் கேலி செய்தனர். ஆனால், நான் விடாப்பிடியாக இருந்தேன். தற்போது எனது வாழ்க்கையையும் மேம்படுத்தி, சகப் பெண்களின் வாழ்க்கையையும் உயர்த்தியுள்ளேன்.” எனத் தெரிவிக்கிறார் பீகாரின் காளான் லேடியான பினா தேவி.