மோசடியில் ஈடுபட்ட நியோ மேக்ஸ் நிதி நிறுவனத்தின் சொத்துக்களை பறிமுதல் செய்யும் நடவடிக்கையை விரைவுபடுத்த வேண்டும் என மதுரை உயர்நீதிமன்ற அமர்வு உத்தரவிட்டுள்ளது.
மதுரையை தலைமை இடமாக கொண்டு செயல்பட்ட நியோமேக்ஸ் நிதி நிறுவனம் மோசடியில் ஈடுபட்ட நிலையில், அந்நிறுவனத்துக்கு சொந்தமான நிலங்களை பறிமுதல் செய்யக்கோரி உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.
இதன் மீதான விசாரணையின் போது, நியோமேக்ஸ் நிறுவனம் சுமார் 188 கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்டதாகவும், மனுதாரர் குறிப்பிட்ட சொத்துக்கள் அடையாளம் காணப்பட்டு பறிமுதல் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது எனவும் பொருளாதார குற்றப்பிரிவு டிஎஸ்பி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
சில சொத்துக்களை பொறுத்தவரை மனுதாரர்கள் முதலீடு செய்வதற்கு முன்பே தனிநபர்களுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதால், அவற்றை பறிமுதல் செய்ய முடியாது எனவும் பொருளாதார குற்றப்பிரிவு டிஎஸ்பியின் மனுவில் கூறப்பட்டிருந்தது.
இதனை விசாரித்த நீதிபதி, முதலீட்டாளர்கள் முதலீடு செய்த பணத்தை திரும்ப பெறும் வகையில் மோசடி நிதி நிறுவனத்தின் சொத்துக்களை பறிமுதல் செய்யும் நடவடிக்கையை விரைவில் முடிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.
இப்பணிக்கான மதிப்பீட்டு குழு மற்றும் துணைக்குழுவுக்கு விசாரணை அமைப்பு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் தனது உத்தரவில் குறிப்பிட்டார்.