H1B விசாவின் ஆண்டுக் கட்டணத்தை 88 லட்சமாக உயர்த்தி அமெரிக்க அதிபர் ட்ரம்ப் புதிய உத்தரவை பிறப்பித்துள்ளார். இந்த உத்தரவால், அதிபர் ட்ரம்ப் அமெரிக்க பொருளாதாரத்தையே அழித்துவிட்டார் என்று டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் உள்ளிட்ட முன்னணி தொழில்நுட்ப நிறுவனத் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். H1B விசா கட்டணம் உயர்வு இந்தியாவுக்கு பாதிப்பா ? என்பது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
அமெரிக்க கனவுகளுடன் இருக்கும் வெளிநாட்டு இளைஞர்களுக்கு H1B விசா ஒரு வரப் பிரசாதமாகும். இது ஒரு அமெரிக்காவில் தற்காலிகமாக பணிபுரிய அனுமதி வழங்கும் நடைமுறையாகும். அமெரிக்க தொழிலாளர்களால் செய்ய முடியாத பணிகளைச் செய்ய கூடிய வெளிநாட்டவர்களைப் பணியமர்த்த மட்டுமே இந்த விசா கொண்டு வரப்பட்டது.
1990-ல் இளங்கலை பட்டத் தகுதி அல்லது அதற்கு மேற்பட்ட தகுதி உடைய பணிகளுக்கான ஊழியர்கள் கிடைப்பது அமெரிக்காவில் சிரமமாக இருந்தது. குறிப்பாக அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் ஆகியவற்றில் பட்டம் பெற்றவர்களுக்காக H1B விசா உருவாக்கப்பட்டது.
ஆரம்பத்தில் மூன்று ஆண்டுகளுக்கு வழங்கப்படும் H1B விசா அதிகபட்சம் ஆறு ஆண்டுகள் வரை நீட்டிக்கப் படும். கிரீன் கார்டு பெற்றவர்களுக்கு மட்டும் H1B விசா காலவரையின்றி புதுப்பிக்க கொள்ள அனுமதிக்கப் படுகிறது.
அமெரிக்க குடியுரிமை மற்றும் குடியேற்ற சேவை தளங்களில் ஆன்லைனில் பதிவு செய்பவர்களில் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கே H1B விசா வழங்கப்படுகிறது.
2004-லிருந்து ஒவ்வொரு ஆண்டும் 85,000க்கும் மேல் H1B விசா வழங்கப் பட்டு வருகிறது. இதற்கான கட்டணம் ஒன்றரை லட்சமாகும். இந்த கட்டணத்தைத் தான் அதிபர் ட்ரம்ப் 88 லட்சமாக உயர்த்தியுள்ளார்.
அமெரிக்காவில் வழங்கப்பட்ட மொத்த H1B விசாக்களில் சுமார் 73 சதவீதம் இந்தியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. அடுத்தப்படியாக, சீனா 12.5 சதவீதத்துடன் இரண்டாவது இடத்தில் உள்ளது.
கடந்த 6 மாதங்களில், அமேசான் 12,000-க்கும் மேற்பட்ட H-1B விசாக்களுக்கு ஒப்புதல் பெற்றுள்ளது. மைக்ரோசாப்ட் மற்றும் மெட்டா ஆகிய நிறுவனங்கள் ஒவ்வொன்றும் 5,000-க்கும் மேற்பட்ட H-1B விசா அனுமதிகளைப் பெற்றுள்ளன. இதற்கு அடுத்த நிலையில், ஆப்பிள் மற்றும் கூகுள் நிறுவனங்களுக்கு அதிகளவில் H-1B விசா அனுமதி வழங்கப்பட்டுள்ளன.
முன்னதாக,கடந்த நான்கு ஆண்டுகளில், H-1B விசாக்களுக்கான விண்ணப்பங்களின் எண்ணிக்கை இதுவரை இல்லாத வகையில் 3,59,000 ஆக குறைந்துள்ளது.
அதிபர் ட்ரம்பின் ,H-1B விசா கட்டண உயர்வால், இவ்வளவு பெரிய தொகையை ஆண்டுதோறும் செலுத்தி, வெளிநாட்டவர்களை பணியில் அமர்த்துவதை அமெரிக்க நிறுவனங்கள் குறைக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. எனவே, இந்திய தொழில்நுட்ப வல்லுனர்கள் தாம் அதிகம் பாதிப்படைவார்கள் என்று கூறப்படுகிறது.
இது தவிர, வரும் அக்டோபர் மாதம் முதல் குடியுரிமை விண்ணப்பதாரர்களுக்கு மிகவும் கடினமான தேர்வையும் அமெரிக்க அரசு அறிமுகப்படுத்த உள்ளது. இதன்படி,அமெரிக்க வரலாறு மற்றும் அரசியலை உள்ளடக்கிய 128 கேள்விகளுக்குப் பதிலளிக்க வேண்டும் என்றும், வாய் மொழி தேர்வில் 20-ல் குறைந்தது 12 சரியான பதில்களைக் கொடுக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூடுதலாக, புதிய Gold card திட்டத்துக்கான உத்தரவையும் ட்ரம்ப் வெளியிட்டுள்ளார். இதன் மூலம் சுமார் 9 கோடி ரூபாய் செலுத்துபவர்களுக்கு விரைவாக விசா பெற முடியும். Gold card மூலம், மிகத் திறமையான நபர்களை மட்டுமே அமெரிக்காவுக்குள் நுழைய அரசு அனுமதிக்கும் என்றும் இதனால், அமெரிக்க வணிகத்துறை மேம்படும் என்றும் அமெரிக்க வர்த்தக செயலாளர் ஹோவர்ட் லுட்னிக் கூறியுள்ளார்.
அமெரிக்காவின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனத் தலைவர்களை இரவு விருந்துக்கு அழைத்த அதிபர் ட்ரம்ப், அவர்களுக்கு கடும் நெருக்கடியை உருவாக்கியுள்ளார்.
H-1B சகாப்தம் அமெரிக்காவில் முடிந்துவிட்டது.இது கட்டணம் அல்ல இரும்பு சுவர் என்று அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.