கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே தெருநாய் கடித்து மூன்றரை வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஓசூர் அருகே உள்ள மாசி நாயக்கனப்பள்ளி கிராமத்தில் விவசாயி ராமமூர்த்தி என்பவருக்கு சொந்தமான விவசாய தோட்டத்தில் உத்திரபிரதேச மாநிலத்தை சேர்ந்த நந்தலால் – ரேகா தம்பதியினர் தங்கி இருந்து கூலி வேலை செய்து வருகின்றனர்.
இவர்களது மகன் சத்யா (3 ½) கடந்த ஆகஸ்ட் 31 ஆம் தேதி அந்த பகுதியில் விளையாடி கொண்டிருந்தபோது அங்கு சுற்றித்திரிந்த தெரு நாய் ஒன்று சிறுவனை கடித்து குதறி உள்ளது. இதில் சிறுவனுக்கு முகம் தலை கை உள்ளிட்ட இடங்களில் பலத்த காயங்கள் ஏற்பட்டது. சிறுவனை மீட்ட பெற்றோர் ஓசூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிறுவனுக்கு தொடர் சிகிச்சை வழங்கப்பட்டது. அதன் பின்னர் சிறுவனை பெற்றோர் தாங்கள் வேலை பார்க்கும் விவசாய தோட்டத்தில் உள்ள வீட்டுக்கு அழைத்து சென்றனர்.
இந்த நிலையில் இன்று சிறுவன் சத்யா வீட்டில் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளான். சிறுவனை மீட்ட பெற்றோர் சிகிச்சைக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றபோது பாதி வழியில் சிறுவன் பரிதாபமாக. உயிரிழந்துள்ளான். இதனால் சிறுவனின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.
சிறுவனை நாய் கடித்து 20 நாட்களுக்கு மேல் ஆகிய நிலையில் நாய் கடிக்கு சிகிச்சை பெற்றும் நாய் கடியின் தாக்கத்தால் சிறுவன் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து கெலமங்கலம் போலீசார் விசாரித்து வருகின்றனர். ஓசூர் பகுதியில் நாய்க்கடியால் பாதிக்கப்பட்டு அடுத்தடுத்து நிகழும் உயிரிழப்பு மக்கள் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. இதனை தடுக்க தமிழக அரசின் சுகாதாரத்துறை உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.ன்றனர்.