நாடு முழுவதும் உள்ள அம்மன் கோயில்களில் நவராத்திரியை விழா வெகு விமரிசையாக தொடங்கியது.
ஆற்றலின் அதிதேவதையாக விளங்கும் சக்தியைப் போற்றி 9 நாட்கள் நவராத்திரி விரதம் கடைபிடிக்கப்படுகிறது. நவராத்திரி காலத்தில் முதல் 3 நாட்கள் வீரத்தை வேண்டி துர்க்கையையும், அடுத்த 3 நாட்கள் செல்வத்தை வேண்டி லட்சுமியையும், இறுதி 3 நாட்கள் கல்வி மற்றும் கலைகளை வேண்டி கலைமகளையும் வழிபடுவது ஐதீகம்.
அந்த வகையில், நடப்பாண்டுக்கான நவராத்திரி விழா நாடு முழுவதும் உள்ள அம்மன் கோயில்களில் வெகு விமரிசையாக தொடங்கியது. டெல்லி சத்தர்பூரில் உள்ள காத்யாயனி அம்மன் கோயிலில் நவராத்திரியையொட்டி அதிகாலை சிறப்பு பூஜை நடைபெற்றது.
இந்த நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதேபோன்று, ஜண்டேவாலன் கோயில் உள்ளிட்ட டெல்லியில் உள்ள பல்வேறு கோயில்களிலும் நவராத்திரியையொட்டி சிறப்பு வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.