பஹல்காம் தாக்குதலின்போது பயங்கரவாதிகள் மதத்தை கேட்டு சுட்டுக்கொன்றதாகவும், ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் மதத்தை பார்க்காமல் அவர்களின் செயல்களை பார்த்து பதிலடி கொடுத்ததாகவும் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
வட ஆப்பிரிக்க நாடான மொராக்கோவிற்கு மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், இரண்டு நாள் அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ளார். ரபாத் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வெளிநாட்டுவாழ் இந்தியர்களுடன் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்துரையாடினார். அப்போது பேசிய அவர், இந்தியா வலுவான மதச்சார்பற்ற அடித்தளத்தை கொண்டுள்ளது என தெரிவித்தார்.
மதம், சமூக பாகுபாடின்றி செயல்படுவதுதான் இந்தியாவின் குணம் என சுட்டிக்காட்டிய அவர், இந்தியாவில் தாக்குதலில் ஈடுபட்ட மக்களையும் அமைப்பையும் மட்டுமே குறிவைத்தது தாக்கியதாக கூறினார். அதே நேரத்தில், எந்தவொரு பொதுமக்களையும் அல்லது ராணுவ நிறுவனத்தையும் குறிவைக்கவில்லை என எடுத்துரைத்தார்.
மேலும், இந்தியாவின் குணத்தை உலக நாடுகளில் நாம் நிலைநிறுத்த வேண்டும் என மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் கேட்டுக்கொண்டார். ஆபரேசன் சிந்தூர் இன்னும் நிறைவடையவில்லை என்றும் பாகிஸ்தானின் நடவடிக்கையை பொறுத்தே ஆபரேசன் பாகம் 2, 3 அமையும் என்றும் ராஜ்நாத்சிங் தெரிவித்தார்.