இதுவரை ராணுவம் மட்டும் பயன்படுத்திவந்த சாட்டிலைட் போன்கள், பொதுமக்கள் கைகளிலும் தவழ போகிறது…டவர் இன்றித் தவிக்கும் பயனாளர்கள் எங்கிருந்தாலும் இனி எளிதாகத் தடையின்றி பேசலாம்… அப்படியொரு சேட்டிலைட் போனை அறிமுகப்படுத்தியிருக்கிறது பிஎஸ்என்எல்…. அது என்ன? பார்க்கலாம் விரிவாக..
இந்தியாவில் தகவல் தொடர்பு துறையில் புதிய புரட்சியை ஏற்படுத்தியிருக்கும் BSNL IsatPhone 2 SATELLITE போன்கள், தொலைதூர, அணுக முடியாத பகுதிகளில் நம்பகமான தகவல் பரிமாற்றத்தை வழங்குகின்றன. கரடுமுரடான செங்குத்தான மலைப்பகுதிகள், அனல் தெறிக்கும் பாலைவனங்கள், ஆகாயத்தை எல்லையாகக் கொண்ட பெருங்கடல்கள் போன்ற அணுக முடியாத பகுதிகளில், துல்லியமாகத் தகவல் தொடர்பை வழங்கக் கூடிய வகையில், BSNL IsatPhone 2 SATELLITE போன்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
BSNL நிறுவனம் பிரத்யேகமாக அறிமுகப்படுத்தியுள்ள IsatPhone 2 போன்கள் செயற்கைக்கோள் உதவியுடன் தகவல் தொடர்பை வழங்குகின்றன. 90 ஆயிரம் ரூபாய் விலைக் கொண்ட இந்தப் போன்கள், ராணுவம், எல்லைப்பாதுகாப்பு படைகள், பேரிடர் மேலாண்மைக் குழுக்கள் போன்றோர்ச் சவாலான சூழ்நிலைகளில் பயன்படுத்தும் வகையில் வடிவமைப்பைப் பெற்றவை..
IsatPhone 2 போன்கள் மூலம், network coverage இல்லாத இடங்களில் கூட அழைப்புகளையும், அவசரகால செய்திகளையும் அனுப்ப முடியும்… இணையதளச் சேவைகள், யுபிஐ பரிவர்த்தனைகளை மேற்கொள்ள முடியும். நீடித்த உழைப்பு, நீண்ட ஆயுள் கொண்ட பேட்டரிகள், நீர்ப்புகா தன்மை, கீழே விழுந்தாலும் உடையாத அம்சங்களை IsatPhone 2 கொண்டுள்ளது.
தொலைதூரப் பகுதிகளில் அடிக்கடி தொடர்பு கொள்ள வேண்டியவர்களுக்கு, BSNL SATELLITE ஃபோன்கள் செலவு குறைந்த தகவல் தொடர்பு தீர்வுகளை வழங்குகின்றன. நியாயமான விலை மற்றும் நிலையான நெட்வொர்க் கவரேஜ் மூலம் பயனர்கள் தங்கள் தகவல் தொடர்பு செலவுகளைக் கணிசமாகக் குறைக்கலாம்.
தனியார் பயனர்களுக்கான மாதாந்திர ரீசார்ஜ் கட்டணம் ஐந்தாயிரத்து 600 ரூபாயாகவும், ஆண்டு ரீசார்ஜ் திட்டம் 61 ஆயிரத்து 600 ரூபாய் என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அரசு பயனர்களுக்கு, மாதாந்திர ரீசார்ஜ் கட்டணம் மாதத்திற்கு மூவாயிரத்து 360 ரூபாயாகவம், ஆண்டு ரீசார்ஜ் திட்டம் 36 ஆயிரத்து 960 ரூபாயாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட வரம்பைத் தாண்டிய எந்தவொரு பயன்பாட்டிற்கும் அழைப்புகளுக்கு நிமிடத்திற்கு 18 ரூபாயும், SMS ஒன்றுக்கு 18 ரூபாயும் கட்டணம் வசூலிக்கப்படும்.
தொடக்கத்தில் அரசு பயனாளர்கள் மட்டுமே பயன்படுத்த அனுமதிக்கப்பட்ட IsatPhone 2 – போன்களை இனி பொதுமக்கள் விருப்பப்பட்டால் வாங்கிக் கொள்ள முடியும். பிஎஸ்என்எல் அல்லது பிஎஸ்என்எல்-ஆல் அங்கீகரிக்கப்பட்ட கடைகள் மூலம் IsatPhone 2 போன்களை வாங்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..
இயற்கை பேரழிவுகள், விபத்துக்கள் அல்லது பயங்கரவாத தாக்குதல்கள் போன்ற அவசரகால சூழ்நிலைகளில் IsatPhone 2 SATELLITE மூலம், மக்கள் விரைவாக அதிகாரிகளை எச்சரிக்கவும், தேவைப்படும் நேரங்களில் உதவி பெறவும் முடியும். மொபைல் நெட்வொர்க்குகள் கிடைக்காத பகுதிகளில், நம்பகமான தகவல் தொடர்பை உறுதி செய்யும் IsatPhone 2, அவசரநிலை மற்றும் டிஜிட்டல் தகவல் தொடர்புக்குப் புதிய அனுபவத்தை வழங்கும் என்பது நிபுணர்களின் கருத்தாக உள்ளது.