இந்திய பெருங்கடலில் பாலிமெட்டாலிக் சல்பைடுகளை ஆய்வு செய்வதற்கான 15 ஆண்டுகால பிரத்யேக உரிமையை பெறும் ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டுள்ளது. இது பிரதமர் நரேந்திர மோடியால் தொடங்கப்பட்ட ஆழ்கடல் பயணத்தின் தொலைநோக்குப் பார்வையை நனவாக்குவதற்கான ஒரு குறிப்பிடத்தக்கப் படியாக பார்க்கப்படுகிறது.
ஆழ்கடல் சுரங்கம் என்பது கடலின் மேல் மட்டத்தில் இருந்து 4000 முதல் 6000 மீட்டர் வரையிலான கடல் ஆழத்தில் உள்ள அரிய கனிம வளங்களை எடுப்பதற்கான முயற்சியாகும். நிலத்தைப் போன்று கடலின் அடியிலும் மலைகள், சமவெளிகள், பள்ளத்தாக்குகள், அகழிகள் போன்றவை இருக்கும் நிலையில், தங்கம், தாமிரம், கோபால்ட், நிக்கல், மாங்கனீஸ், குவார்ட்ஸ் போன்ற கனிமங்கள் கொட்டிக்கிடக்கின்றன.. உலகளவில் ஆழ்கடலில் 12 கோடி டன் அளவிலான கோபால்ட், 160 லட்சம் கோடி அமெரிக்க டாலருக்கு நிகரான தங்கம் உள்ளதாகக் கூறுகிறது ஆய்வு.
சீனா, ரஷ்யா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கடலின் மேற்பரப்பில் இருந்து ஆயிரக்கணக்கான மீட்டர்கள் ஆழத்தில் உள்ள கனிம வளப் புதையலை எடுக்க முனைப்பு காட்டி வரும் நிலையில், இந்தியாவும் அதே பாணியில் தனது அடுத்த அடியை எடுத்து வைத்துள்ளது.
மத்திய இந்தியப் பெருங்கடலின், கார்ல்ஸ்பெர்க் ரிட்ஜ் பகுதியில் உள்ள செம்பு, துத்தநாகம், தங்கம் மற்றும் வெள்ளி ஆகியவற்றைக் கொண்டதும், நீர்வெப்ப துவாரங்களுக்கு அருகே உள்ளதுமான பாலிமெட்டாலிக் சல்பைடுகளை ஆராயும் உரிமையை பெற்றிருக்கிறது இந்தியா. இதற்காகச் சர்வதேச கடற்பரப்பு ஆணையத்துடன் ஒப்பந்தம் செய்துள்ள இந்தியா 15 ஆண்டுகாலத்திற்கான பிரத்யேக உரிமையையும் பெற்றுள்ளது….
புதிய ஒப்பந்தத்தின் மூலம் கார்ஸல்பெர்க ரிட்ஜ் ((Carlsberg Ridge)) பகுதியில் 10 ஆயிரம் சதுரக் கிலோ மீட்டர்ப் பரப்பளவில் பாலிமெட்டாலிக் சல்பைடுகளை இந்தியா ஆய்வு செய்ய உள்ளது என்பதை உறுதிபடுத்தியிருக்கிறார் மத்திய புவி அறிவியல் அமைச்சர் ஜிதேந்திரசிங்… ஆழ்கடலில் கிடைக்கும் பாலிமெட்டாலிக் சல்பைடுகளில் கோபால்ட், நிக்கல், தாமிரம், துத்தநாகம், இரும்பு, வெள்ளி, தங்கம் மற்றும் பிளாட்டினம் போன்ற வணிக ரீதியாக மதிப்புமிக்க உலோகங்கள் நிறைந்துள்ளன. இவை, சூரியஒளி மின்சாரம், காற்றாலை மின்சாரம், மின்சார வாகனங்களுக்கான பேட்டரி தொழில்நுட்பத்தை தயாரிக்க மூலப்பொருட்களாகப் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றை பெறவே இந்தியா இந்த ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது.
பாலிமெட்டாலிக் சல்பைடு ஆய்வுக்காக, சர்வதேச கடற்பரப்பு ஆணையத்துடன் இரண்டு ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ள முதல் நாடாகவும் இந்தியா மாறியுள்ளது. இது கடல்வள மேம்பாட்டில் இந்தியாவின் பங்கையும், இந்திய பெருங்கடலில் இந்தியாவின் இருப்பையும் உறுதிப்படுத்துகிறது. இதில் 2வது ஒப்பந்தமானது மத்திய இந்திய ரிட்ஜ் மற்றும் தென்மேற்கு ரிட்ஜ் பகுதிகளை உள்ளடக்கியிருக்கிறது.
பிரதமர் நரேந்திர மோடியால் தொடங்கப்பட்ட ஆழ்கடல் பயணத்தின் தொலைநோக்குப் பார்வையை நனவாக்குவதற்கான புதிய மைல் கல்லாக இந்த ஒப்பந்தம் பார்க்கப்படுகிறது. கடலுக்கு அடியில் கனிமவள ஆய்வு, சுரங்கத் தொழில்நுட்ப மேம்பாடு மற்றும் இந்தியாவின் நீலப் பொருளாதார முயற்சிகளை வலுப்படுத்துதல் போன்றவற்றில் கவனம் செலுத்துவதாக அமைந்துள்ளது.
கார்ல்ஸ்பெர்க் ரிட்ஜில் பாலிமெட்டாலிக் சல்பைடு ஆய்வுக்கான உரிமைகளை இந்தியா பெற்றதன் மூலம் இந்தியா ஆழ்கடல் ஆராய்ச்சி மற்றும் ஆய்வில் தனது தலைமையை மேலும் பலப்படுத்தியுள்ளது. இது நமது கடல்சார் இருப்பை மேம்படுத்துவதோடு எதிர்கால வளப் பயன்பாட்டிற்கான தேசிய திறனையும் வளர்க்கும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.