வருமானவரி சலுகை, ஜிஎஸ்டி குறைப்பு ஆகிய இரு சீர்திருத்தங்களால், இந்தியாவில் புதிய சகாப்தம் தொடங்குவதாகப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ஜிஎஸ்டி குறைப்பால், ஏழை, நடுத்தர மக்களின் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும் என்றும் பிரதமர் பெருமிதத்துடன் கூறியுள்ளார்.
ஆகஸ்ட் 15 அன்று சுதந்திரத் தினத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி, ஜிஎஸ்டி வரியில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளவிருப்பதாகவும், நாட்டு மக்களுக்குத் தீபாவளி பரிசு காத்திருப்பதாகவும் அறிவித்தார். அதன்படி அண்மையில் டெல்லியில் நடந்த 56வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் 4 அடுக்குகளாக இருந்து ஜிஎஸ்டி விதிப்பு 2 அடுக்குகளாகக் குறைத்து அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், டெல்லியில் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் மோடி, ஜிஎஸ்டி சீர்திருத்தம் நாட்டின் வளர்ச்சியை மேம்படுத்தும் என்று கூறினார். வருமான வரிச் சலுகை மூலம் முதல் பரிசும், ஜிஎஸ்டி குறைப்பு மூலம் இரண்டாம் பரிசும் வழங்கப்பட்டுள்ளதால் நாட்டு மக்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி கிடைத்துள்ளதாகத் தெரிவித்தார். நவராத்திரியின் முதல் நாளில் ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் அமலாவதால், இந்திய பொருளாதாரத்தில் புதிய சகாப்தம் தொடங்குவதாகவும் கூறினார்.
ஜிஎஸ்டி வரி குறைப்பால் 99 சதவிகிதப் பொருட்களின் விலை குறைவதாகக் குறிப்பிட்ட அவர், வர்த்தகத்தில் இருந்து சிக்கல்கள் களையப்பட்டிருப்பதால், அதன் பலனை நுகர்வோருக்குக் கொண்டு செல்ல வியாபாரிகளும் ஆர்வமாக இருக்கிறார்கள் என்றார்.
ஜிஎஸ்டி வரி குறைப்பால் கிடைக்கும் சலுகைகள், ஏழை மற்றும் நடுத்தர மக்களின் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்த போவதாகக் குறிப்பிட்ட அவர், ஏழைகள், பெண்கள், குழந்தைகள், விவசாயிகள் என அனைவரும், தங்களுக்குத் தேவையான பொருட்களை குறைந்த விலையிலேயே வாங்கலாம் என்றும் மகிழ்ச்சியுடன் கூறினார்.
வருமான வரிச் சலுகை, ஜிஎஸ்டி வரி குறைப்பால் இந்த ஆண்டில் இரண்டு லட்சத்து 50 ஆயிரம் கோடி ரூபாய் சேமிக்கப்படும என்றும் அவர் தெரிவித்தார். சிறு, குறு தொழில்கள் மக்களுக்குத் தேவையான பொருட்களை உள்நாட்டிலேயே தயாரிக்க முனைப்பு காட்ட வேண்டும் என்று வலியுறுத்திய பிரதமர் மோடி, உள்நாட்டுப் பொருட்களை நாட்டு மக்கள் கர்வத்தோடு வாங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
உள்நாட்டில் சர்வதேச தரத்தில் பொருட்கள் தயாரிக்கப்படும்போது, இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது என்றும் தெரிவித்தார். நாம் அனைவரும் இணைந்து சுயசார்பு இந்தியாவை உருவாக்க வேண்டும் என்றும் பிரதமர் மோடி தனது உரையில் குறிப்பிட்டார்.