ஓசூர் அருகே நாய்க்கடியால் பாதிக்கப்பட்ட சிறுவன் 20 நாட்களுக்குப் பின் உயிரிழந்த சம்பவம் சோத்தை ஏற்படுத்தி உள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் மாசி நாயக்கனப்பள்ளி கிராமத்தை சேர்ந்த நந்தலால் – ரேகா தம்பதியினர் அதே பகுதியில் கூலித்தொழில் செய்து வந்துள்ளனர்.
வடமாநில தம்பதியான இவர்களுக்கு மூன்றரை வயதில் சத்யா என்ற மகன் இருந்தான். கடந்த மாதம் 31ம் தேதி சிறுவனைத் தெருநாய் ஒன்று கடித்துக் குதறியது.
அலறல் சத்தம் கேட்டுச் சத்யாவை மீட்டு அவரது பெற்றோர் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இந்நிலையில், ஓசூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய சத்யாவுக்குத் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
பின்னர் மயங்கிய சிறுவன் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது பரிதாபமாக உயிரிழந்தான்.
இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் தெருநாய்களைக் கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், நாய்க்கடிக்கான சிகிச்சைத் தரமான முறையில் வழங்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.