H-1B விசா கட்டணத்தை 1 லட்சம் டாலராக உயர்த்தி ட்ரம்ப் நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ள நிலையில், புதிதாக K விசாவை அறிமுகம் செய்து, இளம் திறமையாளர்களைத் தன்பக்கம் ஈர்த்துள்ளது சீன அரசு. இதுகுறித்து விரிவாகப் பார்க்கலாம் இந்தச் செய்திதொகுப்பில்.
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் H-1B விசாவிற்கான கட்டணத்தை 1 லட்சம் டாலர்களாக உயர்த்தியது பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது. இப்படியான சூழலில் தான் K விசாவை அறிமுகப்படுத்தி சீன அரசு அதிரடி காட்டியுள்ளது.
அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் போன்ற துறைகளில் வல்லுநராக இருக்கும் வெளிநாட்டினருக்கு, 1990-ம் ஆண்டு முதல் H-1B விசாவை அமெரிக்க வழங்கி வருகிறது. இதனை ஆரம்பம் முதலே எதிர்த்த தீவிர வலதுசாரிகள், அமெரிக்கர்களின் வேலைவாய்ப்பைப் பறிக்கவே H-1B விசா அறிமுகப்படுத்தப்பட்டதாகக் குற்றம்சாட்டினர்.
குறைந்த ஊதியத்தில் பணியாற்ற வெளிநாட்டினர்த் தயாராக இருக்கும் போது, அமெரிக்க நிறுவனங்கள் அவர்களுக்கே முன்னுரிமைத் தருவதாக கவலைத் தெரிவித்தனர். எனினும் தாராளமயம், தனியார்மயம், உலகமயமாக்கல் ஆகிய கொள்கைகள் காரணமாக அமெரிக்க வேலைவாய்ப்புகளில் வெளிநாட்டினர் ஆதிக்கம் செலுத்தினர்.
ஆனால், கடந்த சில ஆண்டுகளாகக் குறிப்பாக கொரானா தொற்றுக்குப் பின்னர், மண்ணின் மைந்தர்களுக்கே முன்னுரிமை வழங்க வேண்டும் எனப் பல்வேறு நாடுகளிலும் குரல்கள் ஒலிக்கத் தொடங்கின. அமெரிக்க மக்களுக்கும் இந்த எண்ணம் தோன்ற, அதனை சாக்காக வைத்தே மீண்டும் ஆட்சியைப் பிடித்தார் அதிபர் ட்ரம்ப்.
இப்படியான சூழலில் தான் H1B விசா கட்டணத்தை 1 லட்சம் டாலராக அதாவது இந்திய மதிப்பில் 88 லட்சம் ரூபாயாக உயர்த்தி அதிபர் ட்ரம்ப் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். H1B விசா வைத்திருப்பவர்களில் 70 சதவீதம் பேர் இந்தியர்களாக இருக்கும் நிலையில், மீண்டும் மீண்டும் பழிவாங்கும் நடவடிக்கையை ட்ரம்ப் மேற்கொண்டுள்ளாரா? என அவர் மீது விமர்சனம் எழுந்துள்ளது. அடுத்த 12 மாதங்களுக்கு இந்த உத்தரவு அமலில் இருக்கும் என்றும் உத்தரவை நீட்டிப்பது குறித்து பிறகு முடிவு செய்யப்படும் என்று கூறப்பட்டிருப்பது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. .
இதனிடையே H1B விசாவுக்கு நிகரான K விசாவை அறிமுகப்படுத்தி சீன அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் சார்ந்த பட்டதாரிகள் K விசாவிற்கு விண்ணப்பிக்கலாம் என்றும் சம்பந்தபட்ட துறைகளில் குறைந்தபட்சம் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
K விசா பெறுவதற்குச் சீன நிறுவனங்கள் தான் விண்ணப்பதாரருக்கு உதவ வேண்டும் என்பதில்லை. சுயமாகவே K விசாவிற்கு விண்ணப்பிக்கலாம் என்றும் அவர்கள் வயது, கல்வி மற்றும் பணி அனுபவம் அடிப்படையில் தேர்வு இருக்கும் எனவும் சீன அரசு அறிவித்துள்ளது. தற்போது நடைமுறையில் உள்ள 12 விசாக்களுடன் ஒப்பிடுகையில், K விசா கூடுதல் அம்சங்களைப் பெற்றுள்ளது. விசா செல்லுபடி காலம், தங்கும் காலம் என அனைத்தும் அதிகமாகவே உள்ளது.
சீனாவிற்கு வந்த பிறகு, K விசா வைத்திருப்பவர்கள் கல்வி, கலாசாரம், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் போன்ற துறைகளில் ஈடுபடுவதோடு, வணிக நடவடிக்கைகளில் ஈடுபடவும் அனுமதிக்கப்படுவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளை சேர்ந்த இளம் அறிவியல் தொழில்நுட்ப நிபுணர்கள் சீனாவிற்கு வருவதை எளிமையாக்கவும், அவர்களுக்கு இடையேயான பரிமாற்றங்களை ஊக்குவிக்கவும் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகத் தெரிகிறது.
வரும் அக்டோபர் 1-ம் தேதி முதல் K விசா நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சீனாவுக்கு வெளிநாடுகளைச் சேர்ந்த திறமையான பணியாளர்கள் செல்வது அதிகரிக்கும் என நம்பப்படுகிறது. இந்நிலையில் சீனாவின் புதிய விசா அறிமுகம் குறித்து கருத்து தெரிவித்துள்ள தொழில்துறை நிபுணர்கள், இந்தியர்கள் உள்ளிட்ட அனைத்து வெளிநாட்டினருக்கும் அழுத்தம் கொடுக்கலாம் என நினைத்த அதிபர் ட்ரம்பின் கனவில் மண் விழுந்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர். ட்ரம்பு வேட்டைக்குக் கிளம்பும் போது எல்லாம் சீனா சாட்டையை சுழற்றி விடுவதாக அவர்கள் கிண்டல் செய்துள்ளனர்.
















