சொத்துக்குவிப்பு வழக்கில் அமைச்சர் துரைமுருகனை விடுவித்த உத்தரவை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்ற ஆணைக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது.
வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாக அமைச்சர் துரைமுருகன் மீது கடந்த 2011 ஆம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்தது.
இது குறித்த வழக்கு விசாரணை வேலூர் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்ற நிலையில், அமைச்சர்த் துரைமுருகன் மற்றும் அவரது மனைவியை விடுவித்துக் கடந்த 2017 ஆம் ஆண்டு உத்தரவிடப்பட்டது.
இதை எதிர்த்து லஞ்ச ஒழிப்புத்துறை சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்த நிலையில், இருவரையும் விடுவித்த சிறப்பு நீதிமன்ற உத்தரவை ரத்து செய்தும், விசாரணையை 6 மாதங்களில் முடிக்கவும் வேலூர் சிறப்பு நீதிமன்றத்துக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து துரைமுருகன் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்ததோடு, சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெறும் விசாரணைக்கும் தடைவிதித்து உத்தரவிட்டனர்.
மேலும் இந்த வழக்கை உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள முன்னாள், இந்நாள் அமைச்சர்கள் தொடர்ந்த வழக்கோடு இணைத்தும் உத்தரவிட்டனர்.