வர்த்தகப் பிரச்னை மற்றும் H1B விசா கட்டணத்தை அமெரிக்கா உயர்த்திய நிலையில், அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோவை, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் சந்தித்துப் பேசினார்.
ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதைக் கண்டித்து இந்தியப் பொருட்களுக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் 50 சதவீத வரி விதித்தார். மேலும், குடியுரிமை பெறாத வெளிநாட்டவர் அமெரிக்காவில் தங்கி வேலை செய்வதற்கான H1B விசாவுக்கான கட்டணத்தையும் ட்ரம்ப் உயர்த்தினார்.
இதனால் இரு நாடுகள் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இந்தச் சூழலில், ஐக்கிய நாடுகள் சபையின் கூட்டத்தில் பங்கேற்க மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அமெரிக்கா சென்றுள்ளார். அங்கு அவர் அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோவை சந்தித்துப் பேசினார்.
அப்போது, வர்த்தக விவகாரம் மற்றும் H1B விசா குறித்து இருவரும் பேசியதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், கவலைக்குரிய இருதரப்பு மற்றும் சர்வதேச பிரச்சைகள் குறித்து இருவரும் விவாதித்ததாக குறிப்பிட்டுள்ளார்.
இதேபோல் ட்விட்டரில் பதிவிட்டுள்ள அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ, வர்த்தகம், எரிசக்தி உள்ளிட்டவைகளில் இருதரப்பு உறவு குறித்து விவாதித்ததாக பதிவிட்டுள்ளார்.