மும்பையில் உள்ள வங்கி கணக்கு ஒன்றில் இருந்து விடுதலை புலிகள் அமைப்புக்கு 42 கோடி ரூபாயை மாற்ற முயன்றதாக சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் கைதான இலங்கை பெண் வாக்குமூலம் அளித்துள்ளார்.
2019ஆம் ஆண்டு இலங்கையில் இருந்து சுற்றுலா விசாவில் சென்னைக்கு வந்த லட்சுமணன் மேரி பிரான்சிஸ்கா என்பவர் தனது கூட்டாளிகளுடன் அண்ணா நகரில் வீடு எடுத்து தங்கியுள்ளார்.
2022ஆம் ஆண்டு சென்னையில் இருந்து பெங்களூரு செல்ல முயன்ற லட்சுமணன் மேரி பிரான்சிஸ்கா மற்றும் அவரது கூட்டாளிகளை கியூ பிரிவு போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு என்ஐஏ வசம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், லட்சுமணன், மேரி பிரான்சிஸ்கா மற்றும் அவரது கூட்டாளிகள் விடுதலைப் புலிகள் அமைப்புக்கு நிதி திரட்டும் பணியில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்தது.
இதனை தொடர்ந்து, லட்சுமணன் மேரி பிரான்சிஸ்கா உள்ளிட்டோர் மீது சட்டவிரோத பண பரிமாற்றம் தொடர்பாக அமலாக்கத்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில், சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள லட்சுமணன் மேரியிடம் அமலாக்கத்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
அதில், விடுதலை புலிகள் அமைப்பைச் சேர்ந்த உமா காந்தன் என்பவர் டென்மார்க்கில் தங்கியுள்ளதாகவும், அவர் பிறப்பித்த உத்தரவின்பேரில் மும்பையில் உள்ள வங்கி கணக்கு ஒன்றில் இருந்து 42 கோடி ரூபாய் மாற்ற முயன்றதாகவும் லட்சுமணன் மேரி பிரான்சிஸ்கா வாக்குமூலம் அளித்துள்ளார்.