டிக்டாக் செயலிக்காக, சீனாவுடனான வர்த்தகத்தில் அதிபர் ட்ரம்ப் சமரசம் செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. இது குறித்து விரிவாகப் பார்க்கலாம் இந்த செய்தித்தொகுப்பில்.
சீனாவுடனான வர்த்தக விவகாரத்தில் அடம்பிடித்து வந்த அமெரிக்க அதிபர் ட்ரம்பை, டிக்டாக் செயலியை காரணம் காட்டி ஜி ஜின்பிங் தன் வழிக்குக் கொண்டு வந்துள்ளார்.
அமெரிக்காவில் லட்சக்கணக்கான இளைஞர்களின் விருப்பமாக உள்ள டிக்டாக் செயலி, சீனாவை தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. டிக் டாக் செயலி அமெரிக்கர்களின் தனிப்பட்ட தகவல்களை திருடுவதாக குற்றம்சாட்டப்பட்ட நிலையில், அதிபர் ட்ரம்ப் கடுமையான நிபந்தனைகளை விதித்தார்.
அமெரிக்காவில் டிக்டாக் செயலி செயல்பட வேண்டும் என்றால், அதனை அமெரிக்க நிறுவனத்திடம் விற்க வேண்டும் அல்லது கணிசமான பங்கை அமெரிக்க நிறுவனத்திற்கு ஒதுக்க வேண்டும் என வலியுறுத்தினார். இந்த நிபந்தனைகளை ஏற்கவில்லை என்றால் டிக் டாக் செயலிக்கு முழுவதுமாகத் தடை விதிக்கப்படும் என்றும் அவர் அறிவிப்பு வெளியிட்டார்.
டிக் டாக் செயலிக்குத் தடை விதிப்பதற்கான கெடு மூன்று முறைத் தள்ளி வைக்கப்பட்ட நிலையில், டிக் டாக் விவகாரத்தில் சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே ஒப்பந்தம் இறுதியாகி இருப்பதாகத் தகவல் வெளியானது. இதனை உறுதிப்படுத்திய அதிபர் ட்ரம்ப், டிக்டாக் செயலியை நிர்வகிக்கும் பொறுப்பை அமெரிக்க நிறுவனம் பெற்றுள்ளதாக மகிழ்ச்சி தெரிவித்தார். சீனாவுடன் சிறந்ததொரு ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டிருப்பதாகவும் கருத்து தெரிவித்தார்.
ஆனால், சர்வதேச அரசியல் நிபுணர்கள் இந்த விவகாரத்தை வேறு விதமாகப் பார்க்கின்றனர். டிக்டாக் செயலி விவகாரத்தில் வெற்றிப் பெற்றுவிட்டதாக மார்த்தட்டி கொள்ளும் ட்ரம்ப், உண்மையில் தோல்வி மட்டுமே கண்டுள்ளதாக அவர்கள் அடித்துக் கூறுகின்றனர். சீன அதிபர் ஜி ஜின்பிங் அரசியல் சாணக்கியத்தில் கில்லாடி என்பதை நிரூபித்துள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.
தைவானுக்கு அமெரிக்கா வழங்கவிருந்த 400 மில்லியன் டாலர் நிதியுதவி நிறுத்தப்பட்டிருப்பதைச் சுட்டிக்காட்டியுள்ள அரசியல் நிபுணர்கள், ஜி ஜின்பிங் செயலை ஆச்சரியத்துடன் பார்க்கின்றனர்.
டிக்டாக் செயலியை விட்டுக்கொடுப்பது போல் விட்டு கொடுத்து, தனது நாட்டிற்கு எதிரான அச்சுறுத்தலை ஜி ஜின்பிங் முறியடித்துள்ளதாக அவர்கள் கூறுகின்றனர். இது மட்டுமல்ல இருநாடுகளுக்கு இடையிலான வர்த்தகத்திலும் அதிபர் ஜி ஜின்பிங் தனது தேவைகளை நிறைவேற்றிக் கொண்டுள்ளதாக அவர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
எப்படிப் பார்த்தாலும் சின்ன மீனைப் போட்டு பெரிய மீனைப் பிடித்த கதையைத் தான் ஜி ஜின்பிங் அரங்கேற்றியிருப்பதாக அவர்கள் கிண்டலாகத் தெரிவிக்கின்றனர்.