நவராத்திரி திருவிழா தொடங்கியிருக்கும் நிலையில் சென்னை மயிலாப்பூர் மாடவீதிகளில் கொலு பொம்மைகளின் விற்பனைக் களைகட்டத் தொடங்கியுள்ளது. பல்வேறு வடிவங்களில் பல்வேறு வண்ணங்களில் விற்பனைச் செய்யப்படும் கொலு பொம்மைகள் குறித்து இந்தச் செய்தித் தொகுப்பில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.
சென்னையில் நவராத்திரி திருவிழா வந்துவிட்டால் அனைவருக்கும் முதலில் நினைவிற்கு வருவது மயிலாப்பூர் மாடவீதிகள் தான். மயிலைக் கபாலீசுவரர் கோயிலைச் சுற்றிய நான்கு வீதிகளையும் வண்ணமயமான கொலு பொம்மைகள் முழுமையாக அலங்கரித்துள்ளன.
மண், பேப்பர், மரம், மார்பிள் ஆகியவற்றால் உருவாக்கப்பட்டுள்ள கொலு பொம்மைகள் மட்டுமல்லாமல், தங்க முலாம் பூசப்பட்ட மரப்பாச்சி பொம்மைகளின் விற்பனைக் களைகட்டத் தொடங்கியுள்ளது
ஒன்பது நாட்களாகக் கொண்டாடப்படும் இந்த நவராத்திரி விழாவுக்காக விற்பனைச் செய்யப்பட்டு வரும் கொலு பொம்மைகள் அனைத்தும் கைவினைக் கலைஞர்களின் உழைப்பும், கலை நயமும் நிறைந்த கலாச்சாரச் சின்னங்களாக காட்சியளிக்கின்றன.
மண் மற்றும் காகிதக் கூழ் மூலமாகத் தயாரிக்கப்பட்டுள்ள இந்தக் கொலு பொம்மைகள் சென்னை மட்டுமல்லாது உலகின் பல்வேறு நாடுகளுக்கும் விற்பனைக்காக எடுத்துச் செல்லப்பட்டுள்ளன. திருக்கோயில்கள் மட்டுமல்லாது பொதுமக்கள் தங்களின் இல்லங்களிலும் கொலு வைத்து வழிபடுவதால் மயிலாப்பூர் மாடவீதியில் கொலு பொம்மை வாங்குவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளளது.
தசாவதாரம், அஷ்டலட்சுமி, திருமணம் போன்ற பாரம்பரியங்களோடு, சுதந்திரப் போராட்ட வீரர்கள், தலைவர்களின் உருவங்கள், சந்திரயான் போன்ற சமகாலச் சிறப்புகளும் கொலு பொம்மைகளாக வடிவமைக்கப்பட்டுள்ளன. 10 ரூபாயில் தொடங்கும் கொலு பொம்மை விற்பனை அதிகபட்சமாக லட்ச ரூபாய் வரை விற்பனைச் செய்யப்படுகிறது.
புதுப்புது வடிவங்களிலான கொலு பொம்மைகள் ஒரே இடத்தில் கிடைக்கும் என்பதால் பெரும்பாலான பொதுமக்களின் விருப்பத்திற்குரிய இடமாக மயிலாப்பூர் மாடவீதிகள் திகழ்கின்றன. தமிழகம் மட்டுமல்லாது வெளிநாடுகளில் இருந்தும் மயிலாப்பூருக்கு வந்து கொலுபொம்மையை வாங்குவதை வாடிக்கையாகவும் சிலர் வைத்திருக்கின்றனர்
நவராத்திரி என்றாலே கொலு பொம்மையோடு மயிலாப்பூர் மாடவீதிகளும் நினைவிற்கு வரும் அளவிற்கு மயிலாப்பூர் முழுவதுமே விழாக்கோலம் பூண்டுள்ளது. நடப்பாண்டு நவராத்திரி கொலு பொதுமக்களுக்கு மட்டுமல்லாது அதனை விற்கும் வியாபாரிகளுக்கும் நன்மைப் பயக்கும் வகையில் அமைந்துள்ளது.