ஆப்ரேசன் சிந்தூரில் அடிவாங்கிய பாகிஸ்தான் கும்பல், இந்திய ராணுவ அதிகாரிகள் பேசுவது போன்ற வீடியோக்களை AI மூலம் உருவாக்கி அவதூறு பரப்பி வருகின்றன.
பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு எதிராக ஆப்ரேசன் சிந்தூர் நடவடிக்கையை மேற்கொண்டது இந்தியா. இதில் தீவிரவாதிகளுக்கும் குறுக்கே வந்த பாகிஸ்தான் ராணுவத்திற்கும் பெருத்த அடி விழுந்தது.
ஆனால் தாக்குதலால் தங்களுக்கு எதுவுமே ஆகவில்லை; இந்தியாவிற்குதான் இழப்பு எனப் பாகிஸ்தான் மழுப்பி வருகிறது.
அவ்வப்போது தீவிரவாதிகள் வெளியிடும் வீடியோவால் பாகிஸ்தான் ராணுவத்தின் முகத்திரை கிழிவதும் தொடர்கிறது.
இந்நிலையில் இந்திய விமான படை தலைமை தளபதி அமர் ப்ரீத் சிங் பேசுவது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. ஆப்ரேசன் சிந்தூரின் போது பாகிஸ்தான் தாக்குதலால் இரண்டு S-400 வான்பாதுகாப்பு அமைப்புகளை இழந்ததாகவும் அதற்காக ஆப்ரேட்டர்களை திட்டுவது போன்றும் அமர் ப்ரீத் சிங் பேசியிருந்தார்.
ஆனால் உண்மைச் சரிபார்ப்புக் குழுவின் தகவல் படி, அந்த வீடியோ AI மூலம் உருவாக்கப்பட்டது தெரியவந்துள்ளது.