ஜிஎஸ்டி குறைப்புக்குப் பிரதமருக்கு நன்றி தெரிவித்துள்ள திருப்பூர் பனியன் உற்பத்தியாளர்கள், மின் கட்டணம், வரியைத் தமிழக அரசு குறைக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தீபாவளி பரிசாக மத்திய அரசு ஜிஎஸ்டி வரி குறைப்பு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அதன்படி 12, 18 சதவிகித வரி விதிப்பில் இருந்த பல ஆடை ரகங்கள் தற்போது 5 சதவிகிதம் எனக் குறைக்கப்பட்டுள்ளன.
ஜிஎஸ்டி வரி குறைப்புக்கு முன் ஒரு லட்சம் ரூபாய்க்கு ஆடைத் தயாரிப்பவர்கள் 18 ஆயிரம் ரூபாய் வரி செலுத்தும் நிலை இருந்தது.
ஜிஎஸ்டி குறைக்கப்பட்டதற்குப் பின் தற்போது 5 ஆயிரம் ரூபாய் மட்டுமே வரி செலுத்தும் நிலை உள்ளது.
இதன் மூலம் வேலை வாய்ப்பு பெருகும், மக்களுக்கு விலையும் குறையும் என்பதோடு வாங்கும் திறனும் அதிகரிக்கும் என மகிழ்ச்சியடைந்துள்ள பின்னலாடை உற்பத்தியாளர்கள், பிரதமர் மற்றும் நிதியமைச்சருக்கு நன்றித் தெரிவித்துள்ளனர்.
மத்திய அரசு தன் பங்கை அறிவித்துவிட்டது, அதேபோன்று மாநில அரசும் மின் கட்டணம், வரி குறைப்பு போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று பின்னலாடை உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.