மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள அரசு விடுதியில் ஐடிஐ மாணவரை, அறையில் தங்கியிருந்த சக மாணவர்கள் நிர்வாணப்படுத்தி தாக்கிய வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உசிலம்பட்டி அருகே உள்ள செக்கானூரணியில் அரசுப் பள்ளி மாணவர் விடுதியில் பள்ளி, கல்லூரி மற்றும் ஐடிஐ மாணவர்கள் தங்கி பயின்று வருகின்றனர்.
கடந்த 11ஆம் தேதி புதிதாகத் தொழில்நுட்ப பயிற்சி நிலையத்தில் சேர்ந்த 4 மாணவர்களை விடுதி அறையில் முதல்வர் தங்க வைத்துள்ளார்.
அறையில் தங்கியிருந்த ஒரு மாணவரை, சக மாணவர்கள் நிர்வாணப்படுத்தி தாக்கி, செல்போனில் வீடியோவாகப் பதிவு செய்து பாதிக்கப்பட்ட மாணவரின் தந்தையிடம் காண்பித்ததாகக் கூறப்படுகிறது. மேலும், இந்த வீடியோ சமூக வலைதளத்திலும் வைரலானது.
இந்த வீடியோ தொடர்பாகப் பாதிக்கப்பட்ட சிறுவனின் தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து விசாரணை மேற்கொண்ட போலீசார், மாணவனை நிர்வாணப்படுத்தி தாக்கிய சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் 17 வயதுக்குட்பட்ட மாணவர்கள் எனத் தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து 4 சிறுவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், கவனக்குறைவாகச் செயல்பட்டதாக கூறி, விடுதியின் பாதுகாவலர் பாலமுருகனை கல்வி அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்துள்ளனர்.