ஒரு சிறிய வண்டு சொகுசு கார்களை விடக் கோடிக்கணக்கில் விலைபோவது பலரையும் பிரமிக்க வைக்கிறது… சர்வதேச அளவில் மிகவும் செல்வாக்கு மிக்கதாகக் கருதப்படும் மான் கொம்பு வண்டுகளுக்கு இவ்வளவு மதிப்பு ஏன்… காரணம் என்ன பார்க்கலாம்…
ஒரு சிறிய வண்டு, சொகுசு காரை விட உயர்ந்ததாக இருக்க முடியுமா என்றால், ஆமாம் இருக்கத்தான் செய்கிறது என்கிறது சர்வதேச சமூகம்… இது விசித்திரமாகத் தோன்றினாலும், அரிய இனங்களாகப் பார்க்கப்படும் மான் கொம்பு வண்டுகள் அதாவது STAG BEETLE கிரங்கடிக்கும் விலைக்குப் போகிறதாம்..
120-க்கும் மேற்பட்ட இனங்களை உள்ளடக்கிய லூகானிடே குடும்பத்தைச் சேர்ந்த மான் கொம்பு வண்டுகள், பெரும்பாலும் ஆசியா, அமெரிக்கா, ஐரோப்பா முழுவதும் வெப்ப மண்டல காடுகளில் காணப்படுகின்றன… இந்தியாவை எடுத்துக்கொண்டால் அசாம், சிக்கிம், அருணாச்சல பிரதேசம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் வாசம் செய்கின்றன.
காண்டாமிருகம், மான், மாடுகள் போன்றவற்றைப் போன்று சண்டையிடுவதற்காகவே தாடைகளில் கொம்பு போன்ற அமைப்பை இந்த வண்டுகள் கொண்டுள்ளன. அதனால்தான் இவ்வகை வண்டுகள் மான் கொம்பு வண்டுகள் எனப் பெயர் பெற்றுள்ளன.
35 முதல் 75 சென்டி மீட்டர் வரை மட்டுமே வளரும் தன்மை கெண்ட வண்டுகளில் ஆண் வண்டுகள் தந்தம் போன்ற கொம்புகளை கொண்டுள்ளன. பெண் வண்டுகள் அளவில் சிறியதாக இருந்தாலும், மகத்தான கலாச்சாரம், வணிக மதிப்பை பெற்றுள்ளன.
அரிய இனமாகப் பார்க்கப்படுவதாலும், கலாச்சார நம்பிக்கைகள் மற்றும் சர்வதேச சந்தைகளில் அவற்றிற்கான தேவை போன்ற காரணங்களாலும், மான் கொம்பு வண்டுகள் கோடிக் கணக்கில் விலை போகின்றன.
இருப்பினும் வாழ்விடங்கள் அழிவு போன்ற காரணங்களால் ஐரோப்பாவின் சில பகுதிகளில் இவ்வகை வண்டுகள் இனம் இருந்த இடம் தெரியாமல் அழிந்துவிட்டன.
ஜப்பானில் மான் கொம்பு வண்டுகளை வைத்திருப்பது தீவிர பொழுதுப் போக்கு அம்சமாகப் பார்க்கப்படுவதுடன், சண்டைக்காகவும் பயன்படுத்தப்படுகின்றன. ஒரு சில அரிய இன வண்டுகள் டோக்கியோவில் 7 கோடியே 92 லட்சம் ரூபாய் விலை போயிருப்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்துகிறது… ஆசியாவில் மான் கொம்பு வண்டுகள் அதிர்ஷ்டத்தையும், செழிப்பையும் தரும் பொக்கிஷமாக கருதப்படுகிறது. ஐரோப்பாவில் கடந்த கால புராண கதைகளில் நெருப்பு மற்றும் மின்னலுடன் இவ்வகை பொருத்திப் பார்க்கப்பட்டன.
லார்வாக்களாக மட்டும் 2 முதல் 5 ஆண்டுகள் வரை வாழும் மான் கொம்பு வண்டுகள் , முழு வளர்ச்சியடைந்த பின்னர் சில மாதங்கள் மட்டுமே உயிர் வாழ்கின்றன. இவற்றை செயற்கையாக இனப்பெருக்கம் செய்வது கடினம் என்பதால், பெரும்பாலும் அவ்வகை முயற்சி தோல்வியையே தழுவியிருக்கின்றன.
அவை மருத்துவ குணம் நிறைந்ததாகக் கருதப்பட்டாலும் மருத்துவ ரீதியாக உறுதிப்படுத்தப்படவில்லை. எனினும், இவ்வகை வண்டுகள் சில நோய்களைக் குணப்படுத்தும் என்ற நம்பிக்கை அவற்றின் தேவையை அதிகரிக்கிறது. மான் கொம்பு வண்டுகள், வன சுற்றுச்சூழல் அமைப்பில் முக்கிய பங்கை ஆற்றுகின்றன.
காடுகளில் அழுகும் மரங்களை உண்டு உயிர் வாழும் இவ்வகை வண்டுகள், மரங்களைச் சிதைக்கவும், ஊட்டச்சத்துகளை மறுசுழற்சி செய்யும் உதவுகின்றன. இவை ஆரோக்கியமான மரங்களுக்கு எவ்வித தீங்கையும் விளைவிப்பதில்லை என்பது கூடுதல் சிறப்பம்சம். இங்கிலாந்து போன்ற நாடுகளில் மான்கொம்பு வண்டுகளை விற்பனை செய்வது சட்டவிரோதமானது.
இந்தியாவிலும் அவை வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பாதுகாக்கப்படலாம். எனினும் அவற்றிற்கான கருப்பு சந்தை ஒரு பக்கம் செழித்து வளர்வது, மான் கொம்பு வண்டுகள் இனத்தை அடியோடு அழிக்கும் நிலைக்குத் தள்ளிவிடும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.