பீகார் முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் யாதவ் குடும்பத்திற்குள் பூகம்பம் வெடித்திருப்பது தற்போது பேசு பொருளாகியுள்ளது. தனது சிறுநீரகத்தையே கொடுத்து, தந்தையான லாலு பிரசாத் யாதவை காப்பாற்றிய ரோகிணி ஆச்சார்யா, எக்ஸ் தளத்தில் தனது தந்தையையும், சகோதரர் தேஜஸ்வி யாதவையும் UNFOLLOW செய்திருப்பது இணையத்தில் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியுள்ளது.
ரயில்வே வேலைக்கு நிலங்களை லஞ்சமாகப் பெற்றதாக தொடரப்பட்ட வழக்கு, மாட்டுத்தீவன ஊழல் வழக்கு என அடுக்கடுக்கான வழக்குகளில் மிகவும் பிரபலமானவர் பீகார் முன்னாள் முதலமைச்சரும், ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவருமான லாலு பிரசாத் யாதவ். பீகார் சட்டப்பேரவை தேர்தலுக்குச் சில மாதங்களே உள்ள நிலையில், அவர் மீதான வழக்குகளில் விசாரணை சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது.
ஒரு பக்கம் விசாரணை குடைச்சலை கொடுத்துவரும் நிலையில், லாலு பிரசாத் குடும்பத்திற்குள் நிலவும் பிரச்னை புதிய புயலை கிளப்பியுள்ளது. லாலு பிரசாத் யாதவ், தனது மூத்த மகன் தேஜ் பிரதாப் யாதவை கட்சியில் இருந்து சில மாதங்களுக்கு முன்பு நீக்கிய நிலையில், அண்மையில் லாலு பிரசாத் யாதவின் 7 மகள்களில் ஒருவரான ரோகிணி ஆச்சார்யாவின் சமூக வலைதளப் பதிவுகள், அந்தக் குடும்பத்தில் மீண்டும் பெரும் பிளவை ஏற்படுத்தியுள்ளது.
அண்மையில் “பீகார் அதிகார யாத்திரை” என்ற பெயரில் தேஜஸ்வி யாதவ் மாநிலம் முழுவதும் 5 நாள் பிரசார பயணத்தை மேற்கொண்டிருந்தார். அப்போது, கட்சிக்கான பிரசார வாகனத்தில், லாலு பிரசாத் யாதவ் அமர வேண்டிய முன் இருக்கையில், தேஜஸ்வி யாதவின் உதவியாளரும், ராஜ்யசபா எம்.பியுமான சஞ்சய் யாதவ் அமர்ந்திருந்த புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களை ஆக்கிரமித்தது.
இதுவே ரோகிணி ஆச்சார்யாவின் குமுறலுக்கு காரணமாகப் பார்க்கப்பட்டது. அந்த புகைப்படத்தைப் பகிர்ந்த ரோகிணி ஆச்சார்யா, பிரச்சார வாகனத்தில் முன் இருக்கையில் லாலு பிரசாத் யாதவ் அல்லது தேஜஸ்வி யாதவ் அமர்ந்திருக்க வேண்டும், அவர்கள் இல்லாதபோது அந்த இருக்கை காலியாக இருக்க வேண்டுமே தவிர, வேறு யாரும் அங்கு இருப்பதை தலைவர்களோ தொண்டர்களோ ஏற்க மாட்டார்கள் என்றும் கூறியிருந்தார்.
மேலும் தனக்கு சுயமரியாதை முக்கியம் என்றும், கட்சிக்காக எந்தத் தியாகத்தையும் செய்ய தயாராக இருப்பதாகவும் பதிவிட்டு சர்ச்சையைக் கிளப்பியிருந்தார். தனது தந்தையான லாலு பிரசாத் யாதவுக்கு கடந்த 2022ம் ஆண்டு சிறுநீரக தானம் செய்தவரான ரோகிணி ஆச்சார்யா, தனது சுயமரியாதை, தியாகம் குறித்து பதிவிட்டிருந்த கருத்துகள் ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியிருந்தன.
ரோகிணியின் பதிவு ஏற்படுத்திய தாக்கத்தைக் குறைக்க தலித் தலைவர்களான சிவசந்திர ராம் மற்றும் ரேகா பாஸ்வான் ஆகியோர் யாத்திரையின்போது முன்னிலைப்படுத்தப்பட்டனர். அதேநேரத்தில் லாலுவின் மூத்த மகனான தேஜ் பிரதாப் யாதவ், தனது சகோதரிக்கு ஆதரவு தெரிவித்ததோடு, சரியான கேள்விகளை எழுப்பியதாகவும் கூறியிருந்தார்.
ஆனால் சஞ்சய் யாதவ் மீதான ரோகிணியின் மறைமுக விமர்சனமும், புகாரும் லாலு குடும்பத்திற்குள் அமைதியின்மையை ஏற்படுத்தியது. சஞ்சய் யாதவை குறிவைத்ததற்காகக் குடும்பத்தினரிடமிருந்து விமர்சனங்களையும் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. இதன் காரணமாகத் தனது தந்தை லாலு பிரசாத் யாதவ் மற்றும் சகோதரர் தேஜஸ்வி யாதவ் ஆகியோரின் எக்ஸ் தள கணக்குகளை UNFOLLOW செய்தார் ரோகிணி ஆச்சார்யா.
இந்த விவகாரம் குறித்து அதிகாரப்பூர்வ கருத்து எதுவும் வெளியிடப்படவில்லை என்றாலும், தேஜஸ்வியின் நெருங்கிய உதவியாளரும் அரசியல் ஆலோசகருமான சஞ்சய் யாதவின் செல்வாக்கு கட்சிக்குள் அதிகரித்து வருவது குறித்த கவலைகளுக்கு மத்தியில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஹரியானாவைச் சேர்ந்த சஞ்சய் யாதவ், 2024 ஆம் ஆண்டு மாநிலங்களவை எம்.பி.யாக நியமிக்கப்பட்டார்.
கடந்த 2-3 ஆண்டுகளில், சஞ்சய், கட்சியின் மூத்த தலைவர்களை விட தேஜஸ்வி யாதவின் நெருங்கிய உதவியாளராக வளர்ந்துள்ளார். உண்மையில், ஊடகங்களுடனான அனைத்து சந்திப்புகளும் தொடர்புகளும் இப்போது சஞ்சய் யாதவ் வழியாகவே நடத்தப்படுகின்றன. தேர்தல் நெருங்கும் நிலையில், குடும்பத்திற்குள்ளும், கட்சிக்குள்ளும் ஏற்பட்டுள்ள பிளவை ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ் சமாளிப்பாரா என்பதுதான் தற்போதைய கேள்வியாக உள்ளது.