உலகப்புகழ் பெற்ற காஞ்சிபுரம் பட்டு ஜரிகைக்கான ஜிஎஸ்டி வரி 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளதால் மூலப்பொருட்களின் செலவு 7 சதவீதம் குறையும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ஜிஎஸ்டி வரி குறைப்பால் தமிழகத்திற்கு என்னென்ன நன்மைகள் கிடைத்துள்ளன என்பதை மத்திய அரசு பட்டியலிட்டுள்ளது.
அதில், ஜவுளித்துறையில் பின்னலாடை, எம்பிராய்டரி ஆடைகளுக்கான ஜிஎஸ்டி வரி 5ஆக குறைக்கப்பட்டதால் உற்பத்தி செலவு 6 முதல் 11 சதவீதம் வரை குறையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகப்புகழ் பெற்ற காஞ்சிபுரம் பட்டு ஜரிகைக்கான ஜிஎஸ்டி வரி 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளதால் மூலப்பொருட்களின் செலவு 7 சதவீதம் குறையும் என கூறப்பட்டுள்ளது.
பவானி ஜமுக்காளம், மதுரை சுங்குடி புடவைகள் போன்ற புவிசார் குறியீடு பெற்ற பொருட்கள் 6 சதவீதம் வரை மலிவாக கிடைக்கும் என்றும், வெண்கலச் சிலைகளுக்கான ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளதால் தஞ்சையில் உள்ள ஆயிரத்து 200 கைவினைஞர்கள் பயனடைவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாகர்கோவிலில் உள்ள கோயில் நகை செய்யும் 500 கைவினை குடும்பங்களும் 6 சதவீதம் வரை விலை குறைப்பு பயனை அனுபவிப்பார்கள் என கூறப்பட்டுள்ளது.
பித்தளை, கல், மர கைவினைப் பொருட்களின் விலை 7 சதவீதம் வரை குறையும் என்பதால் தஞ்சாவூர், கும்பகோணம், மாமல்லபுரம் ஆகிய இடங்களில் உள்ள சிற்பிகள் ஆதாயம் பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்னை நார்களுக்கான ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்கப்பட்டதால் பொள்ளாச்சி, காங்கேயம், கடலூர் ஆகிய நார் மையங்களில் உள்நாட்டு ஏற்றுமதி சந்தையில் போட்டி திறன் உயரும் என கூறப்பட்டுள்ளது.
பால் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரி 5ஆக குறைந்து 4 முதல் 11 சதவீதம் வரை விலை குறைந்துள்ளதால் ஆவின் நெட்வொர்க் வலுவடையும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
கடல் உணவுகளுக்கான ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளதால் கடலூர், நாகை, தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களில் உள்ள மீனவர்கள் பயனடைவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜிஎஸ்டி வரி குறைப்பால் நோட்டு புத்தகங்களின் வியாபாரம் அதிகரித்து சிவகாசி, பெரம்பலூரில் அச்சு தொழில் வலுப்பெறும் எனக் கூறப்பட்டுள்ளது. எலக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரி 18 சதவீதமாக குறைந்துள்ளதால் ஸ்ரீபெரும்புதூர், ஒரகடம், காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி ஆகிய மையங்களில் உற்பத்தி அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிரோன்களுக்கான வரி 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளதால் சென்னை, ஓசூர், கோவை ஆகிய இடங்களில் உள்ள ட்ரோன் நிறுவனங்களில் உற்பத்தி அதிகரிக்கும் என கூறப்பட்டுள்ளது. ஆட்டோமொபைல் பொருட்களுக்கான வரி 18 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளதால், தமிழகத்தில் உள்ள வாகன உற்பத்தி நிறுவனங்கள் உற்பத்தியை அதிகரித்து பயனடைவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு உற்பத்தி பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரி பூஜ்ஜியமாக குறைக்கப்பட்டதால் சென்னை, கோவை, திருச்சி, சேலம் ஆகிய இடங்களில் உற்பத்தி அதிகரிக்கும் என கூறப்பட்டுள்ளது.
மேலும், ரயில் பெட்டி இயந்திரங்களுக்கான ஜிஎஸ்டி 18ஆக குறைக்கப்பட்டுள்ளதால், சென்னை ஐசிஎஃப் தொழிற்சாலையில் ரயில் பெட்டி கட்டுமான செலவுகள் 5 சதவீதம் மிச்சமாகும் எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.