ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தில் சேர்வதற்கான காலக்கெடு வரும் 30ஆம் தேதியுடன் முடிவடையவுள்ள நிலையில், தமிழக அரசு மவுனம் காத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2021 சட்டமன்ற தேர்தலின்போது திமுக ஆட்சி அமைந்தால், பழைய ஓய்வூதிய திட்டம் மீண்டும் நடைமுறைப்படுத்தப்படும் என வாக்குறுதி அளித்தது. திமுக வெற்றி பெற்று ஆட்சி அமைத்து வாக்குறுதியை நிறைவேற்றாததால் பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த கோரி அரசு ஊழியர்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர்.
இதனை தொடர்ந்து, மத்திய அரசு புதிதாக நடைமுறைப்படுத்த உள்ள ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த திட்டமிட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்தது. இதற்கு அரசு ஊழியர்கள் சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், பழைய ஓய்வூதிய திட்டம், பங்களிப்பு ஓய்வூதிய திட்டம், ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் ஆகியவற்றில் சிறந்ததை தேர்வு செய்து செயல்படுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளதாகக் கூறப்பட்டது.
இதற்காக தமிழக அரசு சார்பில் குழு அமைக்கப்பட்டு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்களில் கருத்து கேட்கப்பட்டது. செப்டம்பர் 30ஆம் தேதி குழு அறிக்கை தாக்கல் செய்ய அவகாசம் வழங்கப்பட்டுள்ள நிலையில், ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தை மாநில அரசுகள் தேர்வு செய்வதற்கான காலக்கெடு அதே 30ஆம் தேதியுடன் நிறைவு பெறவுள்ளது. ஆனால், இது குறித்து முடிவெடுக்காமல் மாநில அரசு மவுனம் காத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.