சமச்சீர் மற்றும் நிலையான பொருளாதார சூழல் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை எதிர்கொள்ள தெற்கு உலக நாடுகள் ஒன்றாக இணைந்து செயல்பட வேண்டும் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் வலியுறுத்தியுள்ளார்.
அமெரிக்காவின் நியூயார்க்கில் நடைபெற்ற ஐநா பொதுச் சபையின் 80வது ஒத்த கருத்துடைய உலகளாவிய தெற்கு நாடுகளின் உயர்மட்டக் கூட்டத்தில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கலந்து கொண்டு உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், ஒற்றுமையை மேம்படுத்துவதற்கும், ஒத்துழைப்பை ஊக்குவிப்பதற்கும் உலகளாவிய தெற்கு நாடுகளிடையே ஆலோசனைகளை வலுப்படுத்த வேண்டும் எனக் கூறினார். தடுப்பூசி உற்பத்தி, டிஜிட்டல் திறன்கள், கல்வி, கலாச்சாரம் போன்றவைகள் தெற்கு நாடுகளின் பலம் என்றும், தெற்கு நாடுகளின் சாதனைகளை வெளி கொண்டுவர வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
காலநிலை நடவடிக்கையில் உலகின் வடக்கு பகுதியை காட்டிலும் தெற்கு பகுதிகளில் சேவை செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
மேலும், ஏஐ போன்ற தொழில்நுட்பங்களை பற்றி விவாதிக்க வேண்டும் என வலியுறுத்திய மத்திய அமைச்சர் ஜெய்சங்கர், ஐநா சபையில் சீர்திருத்தங்கள் கொண்டுவரப்பட வேண்டும் என தெரிவித்தார்.
முன்னதாக, நெதர்லாந்து மற்றும் டென்மார்க், சோமாலியா, செயிண்ட் லூசியா, சிங்கப்பூர், ஜமைக்கா உள்ளிட்ட 8 நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்களை சந்தித்து மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் பேச்சுவார்த்தை நடத்தினார்.