புதுச்சேரியில் மீண்டும் கழிவுநீர் கலந்த குடிநீர் குடித்த 10-க்கும் மேற்பட்ட நபர்கள் வாந்தி, பேதி உள்ளிட்ட உடல் உபாதைகளால் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
புதுச்சேரி நெல்லித்தோப்பு மற்றும் உருளையன்பேட்டை தொகுதிகளில் கடந்த சில தினங்களுக்கு முன் கழிவுநீர் கலந்த குடிநீரை குடித்த 50-க்கும் மேற்பட்டோர் உடல் உபாதைகளால் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று சென்றனர்.
இதில் பாதிக்கப்பட்ட உருளையான்பேட்டை தொகுதியைச் சேர்ந்த 6 பேர் உயிரிழந்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. அதனைத் தொடர்ந்து சுத்தமான குடிநீர் வழங்க உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அதனடிப்படையில் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நாள் தோறும் அரசு சார்பில் 20 லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், நெல்லித்தோப்பு தொகுதியில் உள்ள சில பகுதிகளில் மீண்டும் கழிவுநீர் கலந்த குடிநீர் குடித்ததால் உடல் நலம் பாதிக்கப்பட்ட 10-க்கும் மேற்பட்டோர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அதில் 3 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.