மதுரையில் உள்ள எம்ஜிஆர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்தில் தமிழ் ஜனம் செய்தி எதிரொலியாகப் பூட்டப்பட்டு கிடந்த கழிவறைகளை புதுப்பிக்கும் பணியில் மாநகராட்சி நிர்வாகம் ஈடுபட்டு வருகிறது.
மதுரை மாவட்டம், மாட்டுத்தாவணியில் உள்ள எம்ஜிஆர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்தில் இருந்து, வடக்கு மற்றும் தென் மாவட்டங்களுக்கு நூற்றுக்கணக்கான அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.
இங்கிருந்து சாதாரண நாட்களில் 50 ஆயிரம் முதல் 80 ஆயிரம் பயணிகளும், வார இறுதி நாட்களில் 2 லட்சத்திற்கும் அதிகமான பயணிகளும் பயணங்களை மேற்கொள்வது வாடிக்கை.
மதுரை மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் இந்தப் பேருந்து நிலையத்தில், போதிய அடிப்படை வசதிகள் இல்லாததால் அங்குப் பெரும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக அங்குள்ள கழிவறைகள் சேதமடைந்து மராமத்து பணிகளுக்காகப் பூட்டப்பட்டு கிடந்தது.
இதனால் பேருந்து நிலையமே திறந்தவெளி கழிப்பிடமாக மாறியதால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசி மக்களை கடும் இன்னலுக்குள்ளாக்கியது. இது தொடர்பாக அண்மையில் தமிழ் ஜனம் தொலைக்காட்சியில் செய்தி ஒளிபரப்பு செய்யப்பட்டது.
அதன் எதிரொலியாகப் பல மாதங்களாகப் பூட்டிக்கிடந்த கழிவறைகளை புதுப்பிக்கும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், மக்களின் கோரிக்கையை மாநகராட்சியின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்க வழிவகுத்த தமிழ் ஜனம் தொலைக்காட்சிக்கு மக்கள் நன்றி தெரிவித்தனர்.