பாகிஸ்தான் உடன் சவுதி அரேபியா மேற்கொண்டுள்ள பாதுகாப்பு ஒப்பந்தம் பல்வேறு வினாக்களுக்கு வித்திட்டுள்ளது. குறிப்பாக மெக்கா மற்றும் புனித ஸ்தலங்களுக்கு அச்சுறுத்தல்கள் உள்ளதா? சவுதி அரேபியா பாகிஸ்தான் ராணுவத்தை அழைத்தது ஏன்? சவுதி பிரதமருக்கு என்ன பயம் என்ற கேள்விகளும் முன்வைக்கப்பட்டுள்ளன.
சவுதி அரேபியாவில் 1979ம் ஆண்டு நடந்த சம்பவத்தை யாரும் அவ்வளவு எளிதில் மறந்திருக்க முடியாது…. அல்-ஜமா அல்-சலஃபியா, அல்-முஹ்தாசிப்பின் ஆதரவாளர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் இஸ்லாமியர்களின் புனித தலமான மெக்காவை முழுவதுமாகக் கைப்பற்றும் நிலைக்கு நெருங்கிவிட்டனர்.
சவுதி முடியாட்சி கிட்டத்தட்ட தூக்கியெறியும் நிலைக்கு வந்தது, சவுதி அரேபியாவின் வீழ்ச்சிக்கும் வழிவகுத்தது. இஸ்லாத்தின் இதயப் பகுதியில் நடத்தப்பட்ட இந்தக் கிளர்ச்சி, 45 ஆண்டுகளுக்கும் மேலாக ஆறாத வடுவாக உள்ளது.
இது போன்ற சம்பவம் எதிர்காலத்தில் நடப்பதை தடுக்கவே பாகிஸ்தான் உடன் ஒரு பாதுகாப்பு ஒப்பந்தத்தை செய்து கொண்டது சவுதி அரேபியா. அதுமட்டுமின்றி, ஈரான் அணு ஆயுதங்கள் பெறுவதையோ, பயன்படுத்துவதையோ தடுப்பது, ஏமன் போன்ற நாடுகளிடமிருந்து சவுதி அரச குடும்பத்தை பாதுகாப்பது போன்ற பல்வேறு விஷயங்கள், சவுதி – பாகிஸ்தான் இடையேயான பாதுகாப்பு ஒப்பந்தத்தில் உள்ளதாகப் பாகிஸ்தானின் அரசியல் விஞ்ஞானி ஆயிஷா சித்திக் தெரிவித்துள்ளார்.
மேலும், சவுதி அரேபியா போன்ற மதரீதியான பழமைவாத நாட்டில், அரசுக் குடும்பத்தை ராணுவ படைகளால் மட்டுமே பாதுகாக்க முடியாது எனச் சவுதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் அல்-சவுத் கவலை கொண்டிருப்பதாகவும் அவர் கூறியிருப்பது கவனம் பெற்றுள்ளது. சவுதி அரேபியா – பாகிஸ்தான் இடையேயான ஒப்பந்தத்தை புரிந்து கொள்ள, மெக்கா எழுச்சியை புரிந்து கொள்வது அவசியமாகிறது.
1979ம் ஆண்டு நவம்பர் 20 தேதி நடந்த மெக்கா முற்றுகை, இஸ்லாமிய வரலாற்றில் மிக முக்கியமான அதிர்ச்சியூட்டும் நிகழ்வாக ஆழமாகப் பதிந்துள்ளது. அல்-ஜமா அல்-சலஃபியா அல்-முஹ்தசிபாவின் நூற்றுக்கணக்கான தீவிரவாத ஆதரவாளர்கள் இஸ்லாத்தின் புனிதத் தலமான மெக்காவில் உள்ள பெரிய மசூதியைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர். அப்போது கிளர்ச்சியாளர்கள் தங்களது தோழர் முகமது அல்-கஹ்தானியை “மஹ்தி” அதாவது மீட்பர் என்று கூறி முழக்கமிட்டனர். நீண்ட நாட்களாகப் போர் நீடித்த நிலையில், கிளர்ச்சியாளர்கள், சவுதி பாதுகாப்பு படையினருக்கு சவாலாக விளங்கினர்.
தொடக்கத்தில் கையறு நிலைக்குத் தள்ளப்பட்ட சவுதி ராணுவம், பிரெஞ்சு சிறப்புப் படைகள், பாகிஸ்தான் ராணுவ துருப்புகள் உதவியுடன் மெக்காவை மீட்டது. இதில் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். இந்தச் சம்பவம் சவுதி அரேபியாவின் அரசியல், மதம் மற்றும் பாதுகாப்புக் கொள்கையில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியது.
மெக்காவை கைப்பற்றிய சம்பவம் ஜுஹைமான் எழுச்சி என்றும் வர்ணிக்கப்பட்டது. சவுதி அரச குடும்பம், குறிப்பாகப் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானின் ஒரே கவலை 1979ம் ஆண்டு எழுச்சியை போன்று மீண்டும் ஒரு சம்பவத்திற்கு இடம் தந்துவிடக் கூடாது என்பதுதான்.
மேற்கத்தியமாக்கல் மற்றும் நவீன கலாச்சாரத்தின் அதிருப்தி, இளம் சவுதி குடிமக்களிடையே அதிகரித்து வருகிறது. 2025ம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வின்படி, சவுதி இளைஞர்கள் மேற்கத்திய நாகரிகத்தை எதிர்க்கிறார்கள் என்பதும், இளவரசர் முகமது பின் சல்மானில் விஷன் 2030 என்ற திட்டத்திற்கு உடன்படவில்லை என்பதும் தெரியவந்துள்ளது.
அவர்கள் மத தீவிரவாதத்தில் ஆழமாக வேரூன்றி உள்ளதும் தெரியவந்துள்ளது. இது போன்ற பல்வேறு காரணங்களாலும், உள்நாட்டு கிளர்ச்சியை கட்டுப்படுத்தும் நோக்குடனும் பாகிஸ்தான் உடனான பரஸ்பர ஒப்பந்தம் பலனளிக்கும் என்பது சவுதி அரேபியாவின் நம்பிக்கையாக உள்ளது.
















