கும்பகோணத்தில் பல்வேறு இடங்களில் நவராத்திரியை ஒட்டி வைக்கப்பட்டுள்ள கொலு காட்சியை மக்கள் ஆர்வத்துடன் கண்டு செல்கின்றனர்.
தமிழகத்தில் கொண்டாடப்படும் முக்கிய விழாக்களில் ஒன்றான நவராத்திரி விழா இரு தினங்களுக்கு முன் தொடங்கியது.
இதையொட்டி கோயில் நகரமான கும்பகோணத்தில் வீடுகள், வணிக நிறுவனங்கள் எனப் பல்வேறு இடங்களில் கொலு பொம்மைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
வீடுகள், வணிக நிறுவனங்கள் ஆகியவற்றில் அமைக்கப்பட்டுள்ள கொலு பொம்மைகளை உறவினர்கள், நண்பர்கள் எனப் பலரும் கண்டு வருகின்றனர்.
அந்த வகையில் உணவகத்தில் வைக்கப்பட்டுள்ள கொலு பொம்மை காட்சியில், திருச்செந்தூரில் முருகன் சூரனை வதம் செய்யும் காட்சி, சிவலிங்கத்தை வாராகி அம்மன் வழிபடும் காட்சி ஆகியவை பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது. இங்கு ஒரே இடத்தில் ஆயிரத்து 500 கொலு பொம்மைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.