புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் காரைக்கால் கிளையில் பயிலும் மாணவிகளுக்குப் பேராசிரியர்கள் பாலியல் தொல்லை கொடுப்பதாக வெளியாகியுள்ள ஆடியோக்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் காரைக்கால் கிளையில் ஏராளமான முதுகலை மற்றும் ஆராய்ச்சி மாணவிகள் பயின்று வரும் நிலையில், ஒரு மாணவி அழுதபடியே பேசும் ஆடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
அதில், துறை சார்ந்த பேராசிரியர் ஒருவர் அடிக்கடி ஆபாசமாகப் பேசுவதாகவும், வாட்ஸ்அப் மூலம் ஆபாச படங்களை அனுப்ப சொல்வதாகவும் வேதனை தெரிவித்துள்ளார்.
நிர்வாண புகைப்படங்களை அனுப்பாவிட்டால் இன்டெர்னல் மதிப்பெண்களை வழங்கமாட்டேன் என மிரட்டுவதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.
பெற்றோருக்குத் தெரிந்தால் படிப்பை நிறுத்தி விடுவார்கள் என்ற அச்சத்தில் உள்ளதாகவும், கேரள மாணவிகளை குறிவைத்து தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வருவதாகவும் மாணவி அழுதபடி பேசியுள்ளார்.
இது தொடர்பாகக் காரைக்காலை சேர்ந்த முன்னாள் கல்வி அமைச்சர் கமலக்கண்ணன் ஒரு ஆடியோ வெளியிட்டுள்ளார். அதில், புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் காரைக்கால் கிளையில் பயிலும் மாணவிகளுக்குச் சமீபகாலமாகப் பேராசிரியர்கள் பாலியல் தொல்லை கொடுத்து வருவதாகக் கூறியுள்ளார்.
மேலும், இந்த ஆடியோவையே புகாராக எடுத்துக் கொண்டு காவல்துறையும், பல்கலைக்கழக நிர்வாகிகளும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.