திருவண்ணாமலையில் 200 டன் எடையும் 58.8 அடி உயரமும் கொண்ட அண்ணாமலையார் கோயிலுக்குச் சொந்தமான தேர் மாற்று இடத்திற்கு நகர்த்தப்பட்டது.
பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலின், கார்த்திகை தீபத் திருவிழா உலக பிரசித்தி பெற்றதாகக் கருதப்படுகிறது.
இந்தத் திருவிழாவின் 7-ம் நாளில் விநாயகர், முருகர், அண்ணாமலையார் உடனுறை உண்ணாமுலை அம்மன், பராசக்தி அம்மன் மற்றும் சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்ச மூர்த்திகள், அலங்கரிக்கப்பட்ட மர தேரில் எழுந்தருளி 4 மாட வீதிகளில் வழியாக வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பர்.
இந்நிலையில், இந்த ஆண்டு கார்த்திகை தீபத்திருவிழாவை ஒட்டி, அண்ணாமலையார் கோயிலின் 4 மாட வீதிகளிலும் சிமெண்ட் சாலை அமைக்கும் பணிகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன. தற்போதுவரை 70 சதவீத பணிகள் நிறைவு பெற்றுள்ள நிலையில், மீதமுள்ள பணிகளையும் முடிக்கத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக 200 டன் எடையும், 58.8 அடி உயரமும் கொண்ட அண்ணாமலையார் தேரினை மாற்று இடத்திற்கு நகர்த்தும் பணி நடைபெற்றது.
அதற்காக ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு பக்தி கோஷங்களை முழங்கியபடி, அண்ணாமலையார் கோயிலிலிருந்து தேரை வடம் பிடித்து இழுத்துச் சென்று 200 மீட்டருக்கு அப்பால் நிலை நிறுத்தினர்.