ராணிப்பேட்டையில் 2ம் வகுப்பு மாணவன் முகம் வீங்கிய நிலையில் உயிரிழந்த சம்பவத்தில் உண்மை காரணத்தைத் தெரிவிக்க கோரி உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் தாமரைப்பாக்கத்தை சேர்ந்த மணிகண்டன் என்பவரது 7 வயது மகனான மிதுன், காவனூர் அருகே உள்ள தனியார் பள்ளியில் 2-ம் வகுப்பு பயின்று வந்தார்.
மதிய உணவு இடைவேளை முடிந்த பின்பு வகுப்பறையில் மிதுன் முகம் வீங்கிய நிலையில் மயங்கி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.
அவர் மதியம் உட்கொண்ட கேக்கின் மூலம் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டு உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டது.
இந்நிலையில் மிதுனின் மரணத்தில் மர்மம் இருப்பதாகக் கூறி வேலூர் அரசு மருத்துவமனையில் இருந்து உடலை வாங்க மறுத்துத் தாமரைப்பாக்கத்தில் உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.