சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து எடுக்கப்பட்ட ராகசா சூறாவளியின் புகைப்படங்களை நாசா வெளியிட்டுள்ளது.
தைவான், பிலிப்பைன்ஸ், ஹாங்காங் போன்ற கிழக்கு ஆசிய நாடுகளை ஆட்டிப்படைத்து வரும் ராகசா சூறாவளியால், இதுவரை ஏராளமான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. தைவானில் மட்டும் வெள்ளத்தில் சிக்கி இதுவரை 17 பேர் வரை உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹூலியென் கவுண்டியில் ஏரி கரை உடைந்து ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 15-க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர். தைவான், பிலிப்பைன்ஸ், ஹாங்காங் மற்றும் தென் சீன பகுதிகளில் மட்டும் இதுவரை 7 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதுகாப்பான பகுதிகளுக்கு இடம் மாற்றப்பட்டுள்ளனர்.
ராகசா சூறாவளியின் வேகம் மணிக்கு 200 கிலோ மீட்டர் வரை எட்டிய நிலையில், பள்ளிகள், கல்லூரிகள், தொழிற்சாலைகள் இயங்க தடை விதிக்கப்பட்டது. 700-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டதுடன், அப்பகுதிகளில் போக்குவரத்தும் முழுமையாகத் தடை செய்யப்பட்டதால் மக்கள் வீடுகளுக்குள் முடங்கும் நிலை ஏற்பட்டது.
இந்தச் சூழலில் சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கியுள்ள நாசா வீரர் ஜானி கிம், விண்வெளியிலிருந்து எடுக்கப்பட்ட ராகசா சூறாவளியின் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
வலுவடைந்து வரும் இந்தச் சூறாவளி தற்போது குவாங்டாங் மாகாணத்தில் கரையைக் கடந்து, தெற்கு சீனாவில் பேரழிவை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.