பொதுக்கூட்டங்களின்போது ஏற்படும் சேதத்திற்கு அரசியல் கட்சிகளிடமே இழப்பீடு வசூலிப்பது தொடர்பாக விதிமுறைகளை வகுக்க வேண்டும் எனத் தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தவெக தலைவர் விஜய் பிரசாரத்துக்கு அனுமதி கோரும் விண்ணப்பங்களைப் பாரபட்சமின்றி பரிசீலித்து, அனுமதி வழங்க டிஜிபிக்கு உத்தரவிடக் கோரி, த.வெ.க. தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதி சதீஷ்குமார் முன் விசாரணைக்கு வந்தபோது, முன்கூட்டியே டெபாசிட் வசூலிப்பது குறித்து அனைத்து அரசியல் கட்சிகளின் கருத்துக்களை கேட்க வேண்டும் என்றும், அதற்கு அவகாசம் வழங்க வேண்டும் எனவும், உதவி ஐ.ஜி. சார்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
அவகாசம் கோரி டிஜிபி மனுத் தாக்கல் செய்யாதது குறித்து அதிருப்தி தெரிவித்த நீதிபதி, இதுவரை எத்தனை வழக்குகளில் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது? எனக் கேள்வி எழுப்பினார்.
மேலும் முன்வைப்புத் தொகை வசூலிக்கச் சட்ட விதிகள் ஏதும் தேவையில்லை, மனமிருந்தால் போதும் எனத் தெரிவித்த நீதிபதி, நிகழ்ச்சி முடிந்த பின் பாதிப்புகள் மற்றும் பொதுச்சொத்துகளுக்கு சேதம் இல்லை என்றால் முன்பணத்தை திரும்பப் பெறலாம் என்றார்.
இதையடுத்து முன்வைப்பு தொகை வசூலிப்பது தொடர்பாக விதிமுறைகள் வகுக்கத் தமிழக அரசுக்கு அவகாசம் வழங்கிய நீதிபதி, வழக்கின் விசாரணையை அக்டோபர் 16 ம் தேதிக்குத் தள்ளிவைத்தார்.